நீண்ட காலத்திற்குப் பிறகு இண்டர்நெட் எக்ஸ்புளோரர் (Internet Explorer) வலை உலாவி (Browser) தனது போட்டியாளர்களிடமிருந்து (ஆமாம் 'பலர்பால்'!) கொஞ்சம்(!) கடுமையான போட்டியை எதிர் கொள்கிறது. மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 6.0 பதிப்பை வெளியிட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்தே அதன் அடுத்த பதிப்பான இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0 வை வெளியிட்ட போதும் இன்னும் வலை உலாவி சந்தையில் 82 சதவிகிதத்தை தன் வசம் வைத்திருக்கிறது. முன்பு 'நெட்ஸ்கேப்' பும் (Netscape) சமீப காலமாய் ஃபயர்ஃபாக்ஸ்(Firefox) மட்டுமே இண்டர்நெட் எக்ஸ்புளோரருடன் ஒத்தைக்கு ஒத்தையாய் நின்றிருந்தன. இன்றைக்கு நிலைமை வேறு ...
ஃபயர்ஃபாக்ஸ் 2 , ஆப்ரா 9.2 (Opera), 'காணாமல் போனவர்கள்' பட்டியலில் இருந்த 'நெட்ஸ்கேப்' நிறுவனத்தின் நெட்ஸ்கேப் நேவிகேட்டர் 9, மற்றும் ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்திற்கான 'சஃபாரி' (Safari) என மாற்றத்திற்கான தெரிவுகள் பல. இனி இந்த வலை உலாவிகள் பற்றிய ஒரு அலசல், நிறைய நிறைகள் மற்றும் குறைகள் உங்கள் பார்வைக்கு ...
ஃபயர் ஃபாக்ஸ் (Firefox):
இன்றைக்கு இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் முதன்மைப் போட்டியாளர், கீற்று உலாவுதல் (Tab Browsing), தேடு இயந்திரங்களை உலாவியுடன் ஒருங்கிணைத்தல் போன்ற வசதிகளை பயனாளர்களிடம் பிரபலபடுத்திய பெருமை ஃபயர் ஃபாக்ஸையே சாரும். பெரும்பாலான உலாவிகள் ஃபயர் ஃபாக்ஸின் வடிவமைப்பையே கையாளுகின்றன என்ற வகையில் ஃபயர் ஃ பாக்ஸ் மற்ற உலாவிகளுக்கு ஒரு முன்னோடி.+
வேகம் & விவேகம்:
வலை உலாவிகளில் வேகமான அதே சமயம் மிகப் பாதுகாப்பான வலை உலாவி ஃபயர் ஃபாக்ஸ். போலி உரல்கள் மூலம் நடைபெறும் அடையாளத் திருட்டைத் தடுக்க தகுந்த பாதுகாப்பு வசதிகள் (Built in Anti Phishing Filter) இருக்கின்றன. அதே சமயத்தில் புதிய கீற்றுகளை திறப்பது/ பக்கங்களை தரவிறக்கம் செய்வதில் இண்டர்நெட் எக்ஸ்புளோரரை விட அசாத்திய வேகத்துடன் செயல்படுகிறது.
உலாவுத் தொடர் மீட்சி (Browser Session Resume):
நீங்கள் ஃபயர் ஃபாக்ஸ் உலாவியில் உலாவும் போது உங்கள் இயங்கு தளம் (OS) அல்லது உங்கள் உலாவி் செயலிழந்து விட்டால், மறுமுறை உங்கள் உலாவியை திறக்கும் போது, நீங்கள் கடைசியாக திறந்த கீற்றுக்களை(Tab)/ பக்கங்களை(pages) மீட்டுக் கொள்ள முடியும்.
நீட்சிகள் (Add-ons):
ஃபயர் ஃபாக்ஸ்-ன் மிகப் பெரிய பலம் அதன் நீட்சிகள்(Add-ons). ஃபயர் ஃபாக்ஸின் நீட்சிகளைப் பயன் படுத்துவதன் மூலம் எண்ணற்ற புதிய வசதிகளை ஃபயர் ஃபாக்ஸில் பெற முடியும். உதாரணமாக, கீற்றுகளின் துண்டுக் காட்சி (Tab Preview), புதிய அகராதிகள் (Dictionary), மொழி மாற்றி (Languages), புதிய வடிமைப்பு (Themes) இன்னும் பல.
பிழை திருத்தி (Spell Checker):
வலைப் பக்கத்தின் எழுத்துப் பகுதியில் (Text Area) நீங்கள் எழுதும் போது உங்களின் எழுத்துக்களை சரி பார்த்துப் பிழைகள் இருப்பின் சரி செய்ய ஆலோசனைகளையும் அளிக்கின்றது.
பக்க வரிசைத் தேடல் (Inline Search):
இண்டர்நெட் எக்ஸ்புளொரரில் ஒரு வலைப் பக்கத்தில் ஏதேனும் ஒரு வார்த்தைய தேட வேண்டுமெனில், தேடு சாரளத்தை (Window/Dialog) புதிதாக துவக்க வேண்டும், சில சமயங்களில் நாம் தேடிய வார்த்தை இந்த சாரளத்தின் பின்னாலே கூட மறைந்து கொள்ள கூடும். ஆனால் அந்தப் பிரச்சனையெல்லாம் ஃபயர் ஃபாக்ஸில் இல்லை. இதில் உள்ள பக்க வரிசைத் தேடலில் (inline search) புதிய் சாரளம் தேவையில்ல, அந்தப் பக்கத்தின் கீழ் பகுதியிலேயே தேடு சொற்களை உள்ளீடு செய்யும் வசதி அளிக்கிறது. உங்கள் தெடு சொற்கள் மறைந்திருக்குமோ என்ற கவலையும் தேவையில்லை.
இவைத் தவிர தேடு இயந்திரங்கள் ஒருங்கிணைப்பு(Search Engines), தரவிறக்கம் செய்த பகுதிகளை ஒழுங்கு படுத்தி சேமிக்க (Download Manager), ஜாவாஸ்கிரிப்ட் 1.7 வசதி, புதிய மேம்பாடுகளை தானியக்கமாக நிறுவிக் கொள்ளுதல் (Automatic update) என வசதி வாய்ப்புகள் எக்கச்சக்கம்.-
- ஃபயர் ஃபாக்ஸ் 1.5 லிருந்து 2.0 பதிப்பை வெளியிட்ட போது நிறைய எதிர்பார்ப்புகள் நிறைவேறாமலே போனது. மேலும் பல ஃபயர் ஃபாக்ஸ் 1.5 நீட்சிகள் 2.0 வில் வேலை செய்வதில்லை.
- W3C (World Wide Web Consortium ) ன் பல பரிந்துரைகள் முழுமையாக நிறைவேற்றப் படவில்லை.
- கீற்றுகளின் துண்டுக்காட்சி (Thumbnail Preview) இல்லாத்து குறையே, என்றாலும் நீட்சிகளின் மூலம் ஆறுதல் அடைந்து கொள்ளலாம்.
- ஃபயர் ஃபாக்ஸ நீக்கி (Uninstaller) அதன் கோப்புகளை இயங்கு தளத்திலிருந்து முழுமையாக நீக்குவதில்லை.
நெட்ஸ்கேப் நேவிகேட்டர் (Netscape Navigator):
ஒரு காலத்தில் இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் நேரடிப் போட்டியாளராக இருந்து பின்னர் கொஞ்சம் காலம் காணாமல் போயிருந்த 'நெட்ஸ்கேப் நேவிகேட்டர்' கடந்த மாதம் தனது நெட்ஸ்கேப் நேவிகேட்டர் 9.0 பதிப்பினை வெளியிட்டுள்ளது. நெட்ஸ்கேப் நேவிகேட்டர் 9.0 'மோஸில்லா' வின் கட்டமைப்பையே (Mozilla Framework) பயன் படுத்துகிறது.
"நெட்ஸ்கேப் = ஃபயர் ஃபாக்ஸ் - சில ஃபயர் ஃபாக்ஸ் வசதிக்ள் + சில புதிய வசதிகள்".
'குமுதம்' இதழில் வெளிவரும் ' 6 வித்தியாசங்கள்' பகுதி உங்களுக்கு பிடிக்குமானால் 'நெட்ஸ்கேப் நேவிகேட்டர் 9.0' யை கட்டாயம் நிறுவிப் பயன்படுத்திப் பாருங்கள், பின்னர் ஃபயர் ஃபாக்ஸ்-ம் நெட்ஸ்கேப்பும் செயல் புரியும் விதத்தில் ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிக்க முயற்சியுங்கள்.
+
உரல் பிழை திருத்தி (URL Correction):
உலாவியில் உரலை (URL) உள்ளீடு செய்யும் போது ஏற்படும் பிழைகளை தானாகவே சரி செய்து கொள்கிறது. உதாரணத்திற்கு www.googlecom அல்லது www.google.cmo என உள்ளீடு செய்தாலும் சரியாக www.google.com யை தரவிறக்கம் செய்கிறது. இது போன்று முப்பதிற்கு மேற்ப்பட்ட பிழைகளை சரி செய்கிறது.
பக்கவாட்டு உலாவிப் பகுதி (Side Bar Mini Browser):
ஒரு சுட்டியை (Link) அல்லது உரலை (url) உலாவியின் பக்கவாட்டுப் பகுதியில் திறந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் இரண்டு வலைப் பக்கங்களை பக்கம் பக்கத்தில் வைத்து ஒப்பீடு செய்து கொள்ள முடியும். ஒரே உலாவிப் பக்கத்தில் இரண்டு வலைப் பக்கங்கள்! ஃபயர் ஃபாக்ஸில் உள்ள இந்த வசதியில் புத்தகக் குறிப்புகளை மட்டுமே திறக்க முடியும்.
சுட்டிப்பேடு (Link Pad):
ஒரு வலைப் பக்கத்தில் உலாவும் போது, சில சுட்டிக்ளை (links) அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறீர்கள் என்றால் ஒன்று அந்தச் சுட்டிகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது தற்காலிகமாக உங்கள் புத்தகக் குறிப்பில் (Bookmarks) சேர்க்க வேண்டும். ஆனால் நெட்ஸ்கேப் நேவிகேட்டரில் உங்கள் புத்தகக் குறிப்புகளை குழப்பாமல் சுட்டிப்பேடில் (Link Pad) கணிணிச் சுட்டியைக் கொண்டு இழுத்துப் போட்டு விட்டு (Drag and Drop) வேலையைப் பார்க்கலாம். பின்னர் வேலை முடிந்த பின்னர் அந்தச் சுட்டிகளைப் பார்த்துக் கொள்ளலாம்.
இவைத் தவிர உங்கள் புத்தக் குறிப்புக்களை OPML கோப்புகளாக மாற்றிக் கொள்ளும் வசதியும் மற்றும் சஃபாரியில் உள்ளது போல மாற்றத்தக்க எழுத்துப் பகுதி (Resizable Text Area) ... என பல புதிய வசதிகளும் உள்ளது.
-
- ஃபயர் ஃபாக்ஸின் மறுபதிப்பு, எனவே ஃபயர் ஃபாக்ஸ் குறைபாடுகள்.
- பார்த்தாலே தூக்கம் வருகின்ற மாதிரி முகப்பு வண்ணம்/வடிவமைப்பு.
- உபயோகத்தில் உள்ள கீற்றைத் (Active Tab) தவிர மற்ற கீற்றுகளை மூட இயலாமை.
- பல மோஸில்லா நீட்சிகள் வேலை செய்வதில்லை.
ஆப்ரா, சஃபாரி பற்றி வரும் பகுதிகளில் ...