திரட்டிகள்: தமிழ்மணம் | தேன்கூடு | தமிழ்ப் பதிவுகள்

வாய் - சிறுகதை

"ஒரு ஃப்ரிட்ஜ்குள்ள ஒரு யானைய எப்படி வைப்பீங்க?"

எனக்கு இன்னும் அரைமணி நேரத்துல ஒரு இண்டர்வியூ இருக்குங்க. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், இண்டர்வியூல இப்படியெல்லாமா கேக்கப் போறாங்கங்கிறீங்களா? கேட்டாலும் கேட்கலாம்... இன்னைக்கு நமக்கு நேரமே சரியில்லை, எல்லாமே நேரம் கெட்ட நேரத்துல தான் நடக்குது.

வேகாத வெயில்ல கத்திப்பாராவிலிருந்து பத்து நிமிசம் லொங்கு லொங்குன்னு நடந்து கிண்டி பஸ்டான்ட் வந்தா வெள்ளை போர்டு, மஞ்சள் போர்டுன்னு விதவிதமா 45B. ஆனா எதுலேயும் உட்கார இடமில்லை. ஐயா, பஸ்ல எல்லாம் உட்கார்ந்துட்டு தான் போவாங்களோன்னு தானே கேட்குறீங்க. எல்லாம் கேட்குது, இண்டர்வியூக்கு வரும் போதாவது கொஞ்சம் ட்ரஸ் அயர்ன் பண்ணி டீசன்டா வரக்கூடாதான்னு கூடத்தான் கேப்பீங்க.

அப்புறம் அங்க இங்கன்னு குரங்கு மாதிரி தாவி குதிச்சு ஒரு ஓரத்து சீட்டப் பிடிச்சி உக்காந்தாச்சு. உட்கார்ந்த இருபது நிமிசத்துல எந்திரிக்க சொல்லிடானுங்க. இருபது நிமிசம்னா டிரைவர் பஸ் எடுக்கறத்துக்கு முன்னாடி டீ குடிக்கப் போன பதினைஞ்சு நிமிசமும், கண்டக்டர் டிக்கட் போடுறதுக்காக வண்டிய உருட்டிக்கிட்டு போன ஒரு அஞ்சு நிமிசமும் தான். வண்டி சின்னமலையை தாண்டுறதுக்குள்ள அந்த உருட்டலும் நின்னு போச்சு. எல்லாரும் சேர்ந்து தள்ளுனதுல்ல சைதாப்பேட்டை பாலம் வரைக்கும் தான் தள்ள முடிஞ்சது. இதுவே பெரிய (சோ)சாதனை தான்.எல்லோரும் கூட்டமா கண்டக்டர சுத்திகிட்டு டிக்கெட் பின்னாடி ஆட்டோகிராஃப் வாங்க ஆரம்பிச்சுடாங்க. நாம தான் ஃப்ராகிரஸ் ரிப்போர்ட்லேயே அப்பா கையழுத்த அப்படியே போடுற ஆளாச்சே ... கண்டக்டர் கிறுக்குன மாதிரி ஒரு கிறுக்கு கிறுக்கியாச்சு.

பத்து நிமிசம் கழிச்சு ஆடி அசைஞ்சு வந்துச்சு ஒரு வண்டி அதுவும் ஓவர் லோடு ஏத்தி வாயெல்லாம் நுரை தள்ளி வர்ற மாட்டு வண்டி மாதிரி. ஏதோ ரிசர்வ் பண்ணி வச்ச கூபே இருக்கமாதிரி தான் எல்லாரும் ஓடுறாங்க.

"பின்னாடி இன்னொரு வண்டி ஃப்ரியா வருது அதுல போங்கப்பா, ஒரு பஸ்ல எப்படி ரெண்டு பஸ் கூட்டத்த ஏத்துறது?" கடுப்படித்தார் அந்த கண்டக்டர்.

"கஷ்டப்பட்டுதான்."

ஏற்கனவே கேள்விப் பட்ட கேள்வி மாதிரி இருந்துச்சா... அதான் ஒரு ஆர்வக்கோளாறுள ஏதோ குயிஸ் ப்ரோகிராம்ல பதில் சொல்ற மாதிரி சொல்லித் தொலைச்சுட்டேன். அவரும் தொலைச்சுப்புடுவேன் தொலைச்சுங்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்தார்.

நானும் இப்பக் கூட்டம் குறையும் அப்புறம் குறையும்ன்னு பார்த்துகிட்டே இருக்கேன் ஒவ்வொரு ஸ்டாப்பிலும் அஞ்சு பேரு இறங்கினா பத்து பேரு ஏறிக்கிறாங்க. அதுலேயும் இந்த ஸ்டாப்ல மட்டும் பதினைஞ்சு இருபது பேர்... எல்லாரும் காலேஜ் ஸ்டூடன்ஸ்ன்னு நினைக்கிறேன். முன்னேயும் பின்னேயும் சேர்த்து இரண்டு படிக்கட்டுகளுக்கு மேல் தேவைப்படவில்லை.

"என்ன தலீவா ... பெர்சா கூட்டத்த சேத்துகின போல..."

"இது நான் சேர்த்த கூட்டம் இல்ல அன்பால தானா சேர்ந்த கூட்டம்."

"பாத்தியா... தலீவர் டயலாக்க ..."

தலைவருக்கும் தலைவர் டயலாக் சொன்ன கண்டக்டர்க்கும் மாறி மாறி 'ஓ' போட்டார்கள்.

"ஏம்மா எங்கம்மா போற ...?"

"எஸ்.ஐ.ஈ.டி காலேஜ்."

"மாமா... காலேஜ் போற வயசப் பாத்தியா."

அலை அலையாய் சிரிப்பலை. கமெண்ட் அடிச்சது யாருன்னு பார்க்க முடியல... ஆனா அந்த அம்மாவப் பார்த்தா ஐம்பத்தி எட்டு வயசுக்கு மேல தான் இருக்கும்.

பஸ் கொஞ்சமாய் வேகமெடுத்தது. சன்னமாய் ஒலிக்கத் துவங்கிய 'கானா' சற்று நேரத்திற்கெல்லாம் சில கைத்தட்டல் மற்றும் வண்டியின் தகரத் தட்டுகளுக்குப் பின்னால் உச்சஸ்தாயில் பயணித்தது. நேரம் ஆக ஆக சத்தம் காதைப் பிளந்தது. அந்தப் பிய்ந்து தொங்கிய தகரத்தை முழுதாய் பிய்க்காமல் விடமாட்டார்கள் போல, சிலர் கையாலும் சிலர் கையில் இருந்ததை கொண்டும் சரமாரியாய் தட்டினார்கள். பல்லெல்லாம் கூசியது... சுவற்றில் நகத்தை வைத்து தேய்ப்பதைப் பார்த்தது மாதிரி. பேசாமல் பார்க்காமலே இருந்திருக்கலாம். பக்கத்தில் இருப்பவரைப் பார்த்தேன், இதெல்லாம் என்ன பெரிய இது என்பது மாதிரி நின்றிருந்தார், இத்தனைக்கும் காதில் பஞ்சு கூட இல்லை.

"மச்சி... கிளி சிரிச்சிருச்சுரோய்."

"இப்ப வர்றேன்." ஒருவேளை பச்சை ட்ரஸ் போட்ட பொண்ணு யாரும் முன்னாடி இருக்குமோ என்னவோ?

திரும்பவும் ஒரு சலசலப்பு என்னவோ ஏதோன்னு பார்த்தா அவன் பஸ்ஸோட பக்கவாட்டு சன்னல் கம்பியைப் பிடிச்சுத் தொங்கிகிட்டு இருக்கான். ஏதோ அவன் எலும்பும் தோலுமா இருக்குறதுனால அந்தக் கம்பி இன்னும் பஸ்ல ஒட்டிக்கிட்டு இருக்கு, இல்லேன்னா அந்தத் தம்பியையும் கம்பியையும் ரோட்டுலதான் பார்க்கனும். அவனும் விடுற மாதிரி தெரியல கம்பிய புடிச்சே முன்னாடி போறான், போகப்போறது முன்னாடியா இல்ல மேலயான்னு போய்ச் சேர்ற வரைக்கும் நிச்சயமில்லை. சக்கரத்துல சிக்குனா சங்குதான். ஆனாலும் 'ஐலேசா ... ஐலேசா...' உற்சாகத்துக்கு ஒன்னும் குறைச்சலில்லை. வண்டிய நிப்பாட்டி நாலு விடு விட்டா சரியாப் போகும்.எல்லோரும் சர்க்கஸ் பார்க்கிற மாதிரி பார்க்குறாங்களே தவிர யாரும் எதுவும் சொன்ன மாதிரி தெரியல. கண்ணாடியை தவிர வேற எதையும் கண்டுக்குறதா தெரியல டிரைவர். கண்டக்டரோ விசில் ஊதுதறதுக்கு தவிர வேற எதுக்கும் வாயத் தொறக்குறதில்லைன்னு முடிவு போல.

இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கம் போனதுக்கு சட்டசபையில மேசையைத் தட்டுற மாதிரி திரும்பவும் வண்டிய தட்டு தட்டுன்னு தட்டிட்டானுங்க. திரும்பவும் அதே கரைச்சல்... இரைச்சல். பேசாமல் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி வேற பஸ் பிடிச்சு போயிறலாம் போல.

"மாமா... மேல நிறையா இடம் ஃப்ரியா இருக்கு."

இந்த தடவை நடனம் அதுவும் தலைக்கு மேலே... நிச்சயம் நான்கைந்து பேர்களுக்கு மேலாவது மேலே இருப்பார்கள். எந்த நம்பிக்கை என்று தெரியவில்லை, அதுவும் தூறல் போட்டாலே ஒழுகும் கூரை மேல். எப்படி ஏறினார்கள் என்று தெரியவில்லை. நல்ல வேளை மாடி பஸ் இந்த ரூட்டுல விடலை. இவங்க வீட்டுலயெல்லாம் கஷ்டப்பட்டு படிக்க அனுப்புனா, இதுங்க இங்க சர்க்கஸ் நடத்துதுங்க. இதெல்லாம் இவங்க வீட்டுல இருக்கவங்க பார்க்கனும். ரோட்டில் நடந்து போகிறவர்கள் மட்டும் கொஞ்சம் திரும்பி பார்த்துவிட்டுப் போனார்கள்.

ஆனா ஏன் ஒருத்தருமே வாயைத் தொறக்கமாட்டுறாங்கன்னு தெரியல, ஒருவேளை தினமும் நடக்குற அக்கப்போருதானே இன்னைக்கு என்ன புதுசான்ன ...? இல்ல இவனுங்க கிட்ட வாயைக் குடுத்து யாரு வாங்கிக் கட்டிக்கிறதுன்னா...?

யப்பா... இந்த பஸ்க்கு மட்டும் வாய் இருந்திருச்சுன்னா ...

யாரோ சிரிச்ச மாதிரி இருந்துச்சு...

பஸ் சிரிச்சிருக்குமோ ?!

கணக்கு - சிறுகதை

"ஒரு முட்டை தோசை போடுப்பா..."

வெறும் தட்டையே கொஞ்சம் நேரம் முறைத்து விட்டு அப்புறம் என்னை முறைத்தார் அந்த போலிஸ்காரர். அட ... அவர் முறைச்சார்ன்னா அதுக்காக
நம்ம முழி திருட்டு முழின்னு நினைச்சுக்காதீங்க. அவர் பார்வையே அந்த மாதிரி தான் போல. நானும் இந்த ரெண்டு நாளா பார்த்துகிட்டுதானே
இருக்கேன்.

"தம்பி எந்த பக்கம்?"

"மதுரைப் பக்கம்ங்க."

"பக்கம்ன்னா?"

"திருவேடகம்னு மதுரையிலிருந்து ஒரு இருபது கிலோ மீட்டர் ..."

"இங்க என்ன பண்ணுறீங்க?"

"ஏர்டெல்ல மார்க்கெட்டிங் எக்சிகியூட்டீவ் சார்."

ஒரு மாதிரியாய் பார்த்தார். இதுவும் முறைக்கிற மாதிரி தான் தோனுது. ஒருவேளை டையை கழட்டாம இருந்தா நம்பியிருப்பார் போல. அதுக்காக
பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு மாதிரி இராத்திரி சாப்பிடும் போதும் கூட கழட்டாம இருக்க முடியுமா என்ன?

மார்க்கெட்டிங் எக்சிகியூட்டீவ்ன்னு இல்லீங்க சேல்ஸ் கோ-ஆர்டினேட்டர், சேல்ஸ் ரெப்-ன்னு எப்படி சொன்னாலும் இவர்ன்னு இல்ல எல்லாரும்
இப்படிதாங்க பார்க்குறாங்க. அப்புறம் எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி அடுத்த கேள்வி கேட்பாங்க...

"என்ன படிச்சிருக்கீங்கன்னு ?"

கெமிக்கல் இஞ்சினியரிங்-ன்னு சொன்னா திரும்பவும் ஒரு பார்வை. இந்தப் பார்வைக்குத்தான் எனக்கு இன்னைக்கு வரைக்கும் அர்த்தம் தெரியல.
இளக்காரமா? இல்ல பச்சாதாபமா? இல்ல எங்களுக்கேவான்னு நக்கலான்னு சத்தியமா புரியல.

எல்லாரும் எடுத்தது போக நாம எடுத்த மார்க்குக்கு கெமிக்கல் தாங்க கிடச்சது. கிடைச்சது கெமிக்கல்-னாலும் நமக்கும் சாப்டுவேருக்கும் தாங்க ஒரு கெமிஸ்ட்ரி (அதுக்கு என்ன பண்றது கெமிக்கல் லேபுக்கு போயிட்டு வந்தாலே முடியெல்லாம் கொட்டுது). யுனிக்ஸ், சி, சி++, ஜாவா, கழுத குதிரன்னு கண்டத கடியததையும் படிக்க வேண்டியதாகிப் போச்சு. எறக்குறைய ரெண்டு பொண்டாட்டிகாரன் கதை தான். காலேஜ் முடிச்சு ஒரு வருசம் ஆகிப்போச்சு, நானும் எவனாவது வேலைக்கு கூப்பிடுவான்னு பார்த்தேன். ஒருத்தனும் கண்டுக்குற மாதிரி தெரியல. வீட்டுல வேற ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க (இது எந்த மாதிரின்னு எல்லோருக்கும் தெரியும்). இது வேலைக்கு ஆகாதுன்னு பொட்டியத் தூக்கிட்டு கிளம்பியாச்சு. வேறெங்க கழுத கெட்டா குட்டிசுவர்தான்.

ஒருமணி நேரம் தாமதமாய் எழும்பூர் வந்து சேர்ந்தது இரயில். வண்டி வந்து அரை மணி நேரம் கழித்து தான் வந்தான் சரவணன். நானும் சரவணனும்
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே நண்பர்கள். வடபழனி நூறு அடி ரோட்டிற்க்குப் பின்னால் தான் வீடு. இரண்டாவது மாடி, கதவு பூட்டும்
ப(வ)ழக்கமெல்லாம் இல்லை போல, உள் நுழைந்ததும் நாலு பேர் வரிசையாய் படுத்திருந்தார்கள். ஒருவருக்கும் மற்றொருவருக்கும் போதிய
இடைவெளியெல்லாம் இல்லை. சமையலறை பகுதி பெட்டி வைப்பதற்காக. குளிப்பதற்கும் 'அதற்கும்' சேர்த்து ஒரு அறையை தவிர வேறு அறை எதும்
இல்லை. சரவணனைப் பார்த்தேன்.

"அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்."

அது சரி, நாம என்ன வரவான்னு கேட்டுட்டா வந்தோம், நாளைக்கு காலையில ஸ்டேசன் வந்துருன்னு சொல்லிட்டுல்ல வந்தோம்.

"நாம வேனா மேல படுத்துக்கலாம்" என்றான்.

வானம் பார்த்த படுக்கை. பாதி கட்டப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது மேல் தளம். பாவம் வீட்டுக்காரருக்கு என்னப் பிரச்சனையோ?

"மழை வந்தா என்னா பண்ணுறது?"

"அத வரும் போது பார்த்துக்கலாம்."

வீட்டு வாடகை, சாப்பாடு, பஸ் அப்புறம் கைச்செலவு அப்படி இப்படின்னு பார்த்தா மாசத்திற்க்கு எப்படியும் ஒரு ரெண்டாயிரமாவது வேண்டும். இப்ப
இருக்குறத வச்சு ஒருமாசம் வேணா சமாளிக்கலாம். வேலை கிடைக்கலைன்னா அடுத்த மாசம் ஊருக்குதான் போகனும். டி.வி.ஸ் 50 இருக்குன்னு ஒரு பொய் சொல்லிசைதாப்பேட்டைல ஒரு ஏர்டெல் டீலர் கிட்ட வேலை, மாசத்திற்க்கு இவ்வளவுன்னு ப்ரீபெய்ட் கனெக்சன் புடிக்கனும். என்னது ... புடிக்கலைன்னாவா? போன வரியைத் திரும்ப படிங்க. வேலைக்குப் பேர் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டீவ், சேல்ஸ் கோ-ஆர்டினேட்டர், சேல்ஸ் ரெப்-ன்னுன்னு இடத்துக்கு தகுந்த மாதிரி நானே போட்டுக்குறது தான்.

"தம்பி ... என்ன யோசிக்கிற? என்ன படிச்சிருக்கேன்னு கேட்டேன்." அடடா இவர் இன்னும் விசாரனையை முடிக்கல போல.

கெமிக்கல் இஞ்சினியரிங்-ன்னு நான் பழைய பல்லவியை முடிக்குறதுக்குள்ள சண்முகம் அண்ணன் முட்டை தோசையைப் போட்டு விசாரனையை ஒத்தி வைத்தார். இனி சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் பேச மாட்டார்.

சண்முகம் அண்ணனின் வீடு எங்கள் வீட்டிற்க்கு பக்கத்து சந்தில் தான். எங்க மெஸ்-ம் அதுதான். எங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் அண்ணனிடம் தான் கணக்கு, அந்த மாதத்தின் கடைசியில் பணம் குடுத்தால் போதும். மூன்று வேளைக்கும் சேர்த்து ஒரு மாதத்திற்கு ஆயிரத்திற்கு சற்று குறைவு.
வருமானத்திற்கேற்ற தரமான சாப்பாடு. காலையில் தோசை, சப்பாத்தி, மதியம் தக்காளி, எலுமிச்சை சாதம் எப்போதாவது சாம்பார் ரசத்துடன் சாதம். வேலைக்குப் போகிறவர்களுக்கு தனியே கட்டி வைத்துவிடுவார். இரவு நூறு அடி சாலையில் தள்ளு வண்டியில் கடை போடுவார். இரவுச் சாப்பாடு
அங்கே கையேந்தி பவனில் தான். அண்ணனுக்கு முக்கிய வருமானமே அதுதான். ஆறு ஆறரை மணிக்கெல்லாம் அடுப்பை பற்ற வைத்து விடுவார். ஏழு எட்டு மணிக்கு சூடு பிடிக்கும் வியாபாரம் பத்து பதினொரு மணி வரை கூடச் செல்லும். அப்படி ஒரு கைப்பக்குவம்.

அண்ணனுக்கு சொந்த ஊர் அருப்புக் கோட்டை, எங்க ஊர் பக்கம் தான். சென்னைக்கு வந்து ஒரு பத்து மாசம் ஆயிருக்கும். ஏதோ விவசாயத்துல
நொடிச்சுப் போயி கடன் தொல்லை தாங்க முடியாம சென்னைக்கு ஓடி வந்தாராம். இப்பக் கூட பொண்டாட்டி புள்ளைங்க மாமனார் வீட்டுலதான்
இருக்காங்களாம். மாசம் மாசம் தவறாம பணம் அனுப்பிகிட்டு இருக்காரு கொஞ்சம் நிலைமை சரியாச்சுன்னாத்தான் ஊரப் பக்கம் தலை வைக்க
முடியும்.

"எத்தனை பேருக்கு சோறு போடுது இந்த ஊரு, நம்மள மட்டும் விலக்கிரும்மா என்ன?" என்பார்.

அண்ணன் தான் என்னோட முதல் நம்பிக்கை. ஏதோ பேருக்கு அண்ணன் அண்ணன்-ன்னு சொல்லலை. காலையில சாப்பிட போக கொஞ்சம் நேரமான கூட சாப்பாட வீட்டுக்கே கொண்டு வந்துருவாரு. நிஜமாவே ரெம்ப பாசமானவருங்க.

ஒரு நாள் இரவு இப்படித்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் ... திடு திடு வென சத்தம். போலிஸ் தான். அண்ணன் லைட்டை அனைத்து வண்டியை ஒரம் கட்டப் பார்த்தார்.

"எடுறா வண்டிய ... இங்க யாரைக் கேட்டுடா கடையப் போடுறீங்க?"

திடும் திடும் என லத்திச் சத்தம் சில அடிகள் தரையிலும் சில வண்டியிலும். சாப்பிட்டுக் கொண்டிருந்த பலர் தெறித்து ஒடினார்கள். கொஞ்ச நேரம் தான். கொஞ்ச நேரத்தில் இந்த அளப்பரை எல்லாம் ஓய்ந்து தணிந்தது. அண்ணன் தரையை துளாவி எதையோ தேடிக் கொண்டிருந்தார். அடுப்பு அனைந்து போயிருந்தது. அண்ணன் மட்டும் சூடா கத்திக் கொண்டிருந்தார்.

"கோ... டெய்லி இருபது முப்பதுன்னு வாங்கிட்டு போறான்ல ... அப்புறம் என்ன கொள்ளை வந்துச்சாம் ... வெளங்காதவன் வாசரை எடுத்துட்டு
போறான்."

இனி இன்னைக்கு வியாபாரம் அவ்வளவுதான். இந்த மண்ணெண்னை ஸ்டவுக்கு வாசர் மட்டும் வாங்குறது இனி இயலாத காரியம் புதுசா அடுப்புதான் வாங்கனும். அவர்கள் உதைத்துச் சென்றதில், தண்ணீர்க் குடம் உடைந்து இழித்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் நான் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தேன். அண்ணன் என்னைப் பார்த்தார்.

"ஏண்டா ... இவ்வளவு கலவரம் நடந்துகிட்டு இருக்கும் போது கூட நீ சாப்பிடுறதை நிறுத்தல பார்" என்பது போல இருந்தது. தட்டை கீழே வைக்கப்
போனேன்.

"தம்பி தட்டை வச்சுறாதீங்க ... பக்கத்து வீட்டுல ஸ்டவ் கேட்டு கீட்டு வாங்கிட்டு வாரேன். கொஞ்சம் பொறுத்துகுங்க"-ன்னு போயிட்டு ஸ்டவோட
வந்தார்.

அதுக்கப்புறம் இப்பத்தான் கொஞ்ச நாளா போலிஸை அண்ணன் கடைப் பக்கம் பார்க்கிறேன், அதுவும் அளப்பறை ஆர்ப்பாட்டம் இல்லாம. இவரு ரெண்டு மூணு நாளா இங்க தான் சாப்பிடுறார். தண்ணியில்லாத காட்டுக்கு மாத்துறேன்னு இங்க மாத்திட்டாங்களா? அண்ணன் கிட்ட கேட்டாதான் கதை என்னான்னு தெரியும்.

"எண்ணன்னே ... புதுக் கணக்கா?"

"அட நீ வேற ... அது காந்தி கணக்கு."

மறுபடியும் அலறியது அழைப்பு மணி. காலையிலிருந்து ஏறக்குறைய இது பதினைந்தாவது முறை. சிட்டுக்குருவி சப்தம், குயிலோசை, செல்லமாய்
அழைக்கும் மழலை என விதமாய் அழைக்கும் அழைப்பு மணி என்றால் கூடப் பரவாயில்லை. இது அலறல். பழைய சைக்கிள் மணியை காதுக்குப்
பக்கத்தில் வைத்து விடாமல் அடிக்கின்ற மாதிரி. சப்தம் கேட்டவுடனே கதவுக்கு ஓடிவிட வேண்டும், இல்லையெனில் திரும்பவும் கேட்க்க நேரிடும்.
இங்கே யாருக்கும் காத்திருக்கும் அளவுக்கு நேரமில்லை. சில சமயம் பழகிய முகங்களும், சில சமயம் புதிய முகங்களும் ... எல்லோருக்குமே
அழைப்பதற்க்கென்று ஏதோ ஒரு உறவு வாய்த்திருக்கிறது, அம்மா, அக்கா, அண்ணன், அய்யா. ஐயோ, காலையிலிருந்து நாலு ஓட்டுக்கு நாற்பது ஓட்டுச்
சீட்டுக்கள் எல்லோருக்கும் ஒரே கோரிக்கைகள்... வேறு வேறு வார்த்தைகளில், வேறு வேறு சின்னங்களில். இந்த முறை பழகிய முகம். பழக்கம் என்றால் நான் டவுசர் போட்ட காலத்திலிருந்தே பழக்கம். வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையுமாய் நின்றிருந்தான் இராமசாமி. அதே கரை
வேட்டிதான். அதே என்றால் கடைசியாய் நாங்கள் சென்னையில் சந்தித்த போது அணிந்திருந்த அதே கரை வேட்டி தான். இப்போது மாற்றியிருப்பான்
அல்லது விட்டொழித்திருப்பான் என்று நினைத்தேன். ம் .. ஹீம்.

நானும் இராமசாமியும் ஒரே தெருவில்தான் இருந்தோம். தெருவின் கடைசிக்கு முந்தைய வீடு எங்கள் வீடு, அதற்க்கு அடுத்த வீடு இராமசாமி வீடு. எட்டாம் வகுப்பு வரையிலும் நானும் இராமசாமியும் வகுப்புத் தோழர்கள், அப்புறமாய் சில வருடங்கள் பள்ளித் தோழர்கள். முதலில் சின்ன
இடைவெளிதான், அப்புறம் நான் தொழிற்க்கல்விக்கும், அவன் தொழிலுக்கும் போனதிலிருந்து ஒர் ஊர்க்காரர்களாய் மட்டும் ஆகிப்போனோம். எங்கள்
தெருவும் சந்தைப் பேட்டை தெருவும் சந்திக்கும் மூலையில் தான் இராமசாமியின் கடை. 'இராமசாமி பலசரக்குக் கடை' என்பதை விட 'மூலைக்கடை' என்பது தான் பிரபலம். மூலைக்கடைக்கு இராமசாமி மூன்றாம் தலைமுறை முதலாளி.

'தியாகு எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ்' - மூலைக்கடைக்கு அந்தப் பக்கத்திலிருந்து இரண்டாவது கடை. தீர்க்கமுடியாத பழுதுடன் சில பல பழைய வானொலிகளும், பிரித்துப் போட்ட ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் மட்டுமே இருக்கின்றது காலம் காலமாய், கடையின் பெயரை நியாப்படுத்த
வேண்டாமா? ஆனால் பலசரக்கு கடைக்கு நிகராக எப்போதும் ஒரு கூட்டம், கரை வேட்டிக் கூட்டம். ஆகாஷவானியின் செய்தியறிக்கையை தவிர்த்து
விட்டுப் பார்த்தால் எப்போதும் அரசியல் செய்திகள் தான் கறை புரண்டு ஓடும். தியாகராஜன் என்ற தியாகு 'அண்ணன்' அந்தக் கட்சியின் நகரச்
செயலாளர், இராமசாமிக்கு அண்ணன் முறை. பெரியண்ணன் போல, குறைந்தபட்சம் பதினைந்து இருபது வயது வித்தியாசமிருக்கும். இங்கு
இல்லையென்றால் மட்டுமே ... ஒருவேளை இராமசாமியை மூலைக்கடையில் பார்க்கக் கூடும்.

அம்மா ஒரு நாள் சிவன் கோவிலுக்கு வெளியே பார்த்தாய் சொன்னார்கள். அவன் பிரதோஷத்திற்க்கு போகின்ற ஆள் கிடையாது.

"அந்த கட்சிக்காரப் பயலுகளோட சேர்ந்து சிகரெட் பிடிச்சுக்கிட்டு இருந்தான் போல, என்னப் பார்த்ததும் சிகரெட்ட தூக்கிப் போட்டுட்டான். வெள்ளையும்
சொள்ளையுமா பெரிய மனுஷன் மாதிரிதான் இருக்கான். தண்ணி கிண்ணியெல்லாம் அடிப்பான் போல கண்ணமெல்லாம் உப்பிப் போய் ..."

"..."

"நீயும் அவன் கூட சேர்ந்து கெட்டு கிட்டு போகாத ..."

வயதுக்கு மீறிய இந்த சிநேகிதம் தான் காரணமா என்று சரியாகத் தெரியவில்லை. இராமசாமிக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த வயதுக்கு மீறிய பெரிய மனுஷத்தனம் மிக இயல்பாய் பொருந்திப் போய்கிறது. நானெல்லாம் காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கின்ற போதே தினத்தந்தி படித்து தெளிவாய் அரசியல் பேசுவான். எனக்கெல்லாம் முதல் ஓட்டுப் போடவே முப்பது வயதுக்கு மேலாகிவிட்டது. பதினெட்டு வயதுக்கு முன்னாலேயே பதினெட்டு ஓட்டு போட்டிருப்பான். "மாப்ள... ஒட்டு போடுறதுக்கு பூத்து பக்கம் கிக்கம் போயிறாத ... உன் ஓட்டெல்லாம் போட்டாச்சு..." ன்னு அசால்டா சொல்லிட்டு போவான். பேசிக்கொண்டிருக்கும் இடைவெளியில் சைக்கிளில் போகும் எவரோ ஒருவரை "எண்ணே ... பாத்தீங்களா, பார்த்துட்டு பாக்காம போறீங்க" என்பான். ஊரில் முக்கால்வாசிப் பேரை அவனுக்கும், பாதிப் பேருக்கு அவனையும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

எம்.எல்.ஏ வைப் பார்க்க, செக்ரட்ரியேட்ல ஒரு சின்ன வேலை , பொதுக்கூட்டம் ... என்று எப்போது சென்னை வந்தாலும் பழைய எம்.எல்.ஏ
ஹாஸ்டலில் தான் தங்குவான், கட்சி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி. இந்த முறை அங்கில்லை. எழும்பூர் இரயில் நிலையத்தின் பக்கத்தில் தான் அந்த தெரு. ஏறக்குறைய சந்து தான், தண்டவாளத்தின் அகலத்தை தாண்டிவிட வாய்ப்பில்லை. அந்த சின்ன சந்தில் லாட்ஜை தேடிக் கண்டுபிடிப்பதில் பெரிய சிரமமில்லை. உள்நுழைந்ததும் இடது புறத்தில் மூன்றாவது அறை என்று சொல்லியிருந்தான். அறைக் கதவு
தாழிடப்படவில்லை, என்னை எதிர்பார்த்து காத்திருப்பான் போல.

"வாடா ... உன்னத்தான் எதிர்பார்த்துட்டிருந்தேன். நல்லாயிருக்கேல்ல?

அப்புறம்... எப்படி போய்கிட்டு இருக்கு?"

"நல்லா இருக்கேன். வீட்டுக்கு வந்திருக்கலாம்ல ... ஏண்டா இங்க வந்து இருக்க ?"

"நம்ம வீட்டுக்கு வர்ரதப் பத்தி என்ன ... நம்ம வீட்டுக்கு வராமலா... நான் மட்டும்னா பரவாயில்ல ... நானும் இன்னொரு கட்சிக்காரரும் வந்தோம்.
அதான்..."

ஒருத்தர் கட்டிலிலும், ஒருவர் தரையிலும் வேண்டுமானால் படுத்துக் கொள்ளலாம். அவ்வளவு தான் இடம். அறையின் மூலையில் ஒரு சின்ன
மின்விசிறி கொஞ்சம் பெரிய சப்தத்துடன். மதிய வெயில் இன்னும் அறைக்குள் அலைந்து கொண்டிருந்தது. கதவை இன்னும் கொஞ்சம் திறந்து
வைத்தால் தேவலாம் போலிருந்தது.

"வீட்டுல எல்லாம் எப்படி இருக்காங்க, பொண்ணு ஸ்கூலுக்கு போய்கிட்டு இருக்காளா?"

"எல்லாரும் நல்லாயிருக்காங்க"

"வியாபாரமெல்லாம் எப்படி போய்க்கிட்டுருக்கு? கடைல புதுசா வேலையெல்லாம் பார்த்திருக்க போல, போன தடவை ஊருக்கு வந்த போது பார்த்தேன். நல்லா மார்டனா இருக்கு."

"கடைய இப்ப நாம நடத்துறதில்ல ... மூணு வருசத்துக்குன்னு நம்ம ஜெனகனுக்கு எழுதி கொடுத்திருக்கேன்."

"ஏதாவது பிரச்சனையா?"

"எல்லாம் கடன் பிரச்சனை தான். வியாபரத்துல கொஞ்சம் நட்டமா போயிருச்சு, நல்லா போய்கிட்டு இருந்த கடை தான். ஒழுங்கா உட்க்காந்து
வியாபாரத்த பாத்திருந்தா இப்படி ஆயிருக்குமான்னு தெரியல. நம்ம தான் பாதி நாள் கட்சி கட்சின்னு சுத்துரோமே அப்புறம் எப்படி? கடை பசங்களும்
நம்பிக்கையான பசங்களாத் தான் இருந்தாங்க, என்னமோ தெரியல கையாடல் பண்ணிட்டாங்க. அவங்கள சொல்லி என்ன பண்றது, நமக்குள்ள வேணும். அதுல ஒருத்தன் இப்ப தனியா கடை போட்டிருக்கான். நல்லா இருந்தா சரி தான். நம்ம ஊர்ல மளிகை கடைல நட்டப்பட்டது நான் ஒருத்தனாதான் இருக்கும்." விரக்தியாய் சிரித்தான்.

"முதல்ல இழுத்து புடிச்சிரலாம்ன்னு தான் நினைச்சேன், அப்புறம் வட்டிக்கு மேல வட்டின்னு எல்லாம் கை மீறிப் போயிருச்சு."

"காலம் காலமா நடந்துகிட்டு இருக்கிற கடைய சட்டுனு மூடவும் முடியல ... பேரு கெட்டு போயிரும்ல ... பேரக் கீர மாத்தாம நான் எடுத்து
நடத்துறேன்னு ஜெனகன் சொன்னான். மூணு வருசத்துக்கு கைமாத்தி விட்டுருக்கு. வெளிய யாருக்கும் தெரியாது."

"அப்புறம் ஏண்டா கட்சி கட்சின்னு கட்சிய கட்டிகிட்டு இன்னமும் இங்க சுத்திக்கிட்டு இருக்க?"

"கட்சியில இருக்குறதுனாலத் தான் வட்டி குடுக்க கொஞ்சம் முன்னப் பின்ன ஆனக்கூட பெருசா ஒன்னும் சொல்றதில்லை. இதுவே வேற ஒரு ஆளா
இருந்தா இன்னயேரம் கழுத்துல துண்டப் போட்டுருப்பாங்க."

"ம் ..."

"இந்த வருசம் நம்ம ஊரு பஞ்சாயத்து போர்டு எலக்சன்ல தலைவருக்கு நிக்கலாம்னு இருக்கேன். நம்ம ஊர் அமைச்சர் தான் தேர்தல் பொருப்பாளர்,
அதான் அவரை பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன். போன ரெண்டு எலக்சனுக்கும் நான் தானே அவருக்கு முன்னாடி நின்னு தேர்தல் வேலை பார்த்தது. இத்தனை வருசம் கட்சியில இருந்திருக்கோம் இதுவரைக்கும் ஒரு வார்டு கவுன்சிலர் போஸ்ட்டுக்காவது சீட்டு கேட்டிருப்பேனா? பத்து பனிரண்டு வருசமா எதிர்க்கட்சியா இருந்தப்பக்கூட, நம்ம ஊர்ல வேற எந்தக் கட்சியாவது ஜெயிச்சிருக்க விட்டிருக்கமா. போன தடவை எம்.பி எலக்சன்ல
தோத்தப்பக்கூட நம்ம ஊர்ல பதினைஞ்சாயிரம் வோட்டு லீடுங் தான்."

"இது என்னடா இன்டர்வியூ போற மாதிரி பைல் ..."

முன்னாள் அமைச்சர்களின் முன்னாலும் பின்னாலும் நின்ற படி சில, கைத்தறி ஆடைகளை பொன்னாடையாக பெற்றுக் கொள்வது மாதிரி சில,
ஆளுயர மாலையில் மறைந்து போன தலைவரின் பக்கத்தில் கொஞ்சமாய் எட்டிப் பார்த்தபடி, போராட்டங்களுக்கு தலைவரின் சார்பில் அறை கூவலிட்டு வைக்கப்பட்ட பிரம்மாண்ட தட்டி போஸ்டர்கள் சில என அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு புகைப்படத் தொகுப்பு. நாற்ப்பத்தி நான்கு முறை
கட்சிக்காக சிறை சென்றதில், முப்பத்து சொச்சதிற்கான ஆதாரங்கள். தலைமை தாங்க, சிறப்புறை, நன்றியுறை ஆற்ற அவனை அழைத்த சில
அழைப்பிதழ்கள். கடைசியாய் சில பரிந்துரைக் கடிதங்கள் என அரசியல் வாழ்க்கையை நன்றாகத் தான் தொகுத்திருந்தான்.

"என்ன ரெம்ப வெக்கையாயிருக்கா... அப்படியே வெளிய காத்தாட போய் 'டீ' சாப்பிட்டு கிட்டே வேணா பேசலாம்."

"இல்ல வேணாம்டா ..."

"மாஸ்டர் ஒரு 'டீ' ஒரு 'பால்'. நீ இன்னும் பால் தானே? நீ மட்டும் தானா இல்ல வீட்டுல யாருமே காபி, டீ சாப்பிட மாட்டாங்களா? "

"நான் மட்டும் தான். அவங்க எல்லாம் சாப்பிட்டுக்குவாங்க."

"நீ மெட்ராஸ் வந்த 'விசயம்' வீட்டுல தெரியுமா?"

"தெரியாது. மொத புலம்புவா. எப்பவும் பொலம்பரதுதான் ... ஊர் உலகத்துல அவனவன் எப்படி எப்படி எல்லாம் சம்பாதிக்குறான், இங்க
சம்பாதிக்காட்டியும் கூட பராவாயில்ல இருக்கறத காப்பாத்தவாவது தெரியனும். ரெண்டும் இல்லன்னு அதே புலம்பல்தான்."

"ம் ..."

"சாமாளிச்சிடுவேன்."

"..."

"நீ எப்ப ஊருக்கு வர்ற?"

"அடுத்த மாசம் இல்ல அதுக்கு அடுத்த மாசம் வரலாம்ன்னு இருக்கேன். அப்ப வந்து பாக்குறேன்."

சொல்லி வைத்தது மாதிரி தான் எல்லாம் நடக்கிறது. அவனிடம் எதேட்சையாய் சொன்ன அதே அடுத்த மாதத்திற்கு அடுத்த மாதத்தில் நான் ஊருக்கு வந்திருக்கிறேன். வந்து மூன்று நாட்களாகியும் இந்த நிமிடத்திற்கு முன்பு வரை அவனை பார்க்கவில்லை. பார்க்கவில்லை என்பதை விட பார்க்க முடியவில்லை என்பது தான் சரி.

"நீ எப்படா வந்த?" - கடைசியாய் சென்னையில் கேட்ட குரல் மாதிரி கூட இல்லை, கொஞ்சம் உடைந்தது மாதிரி தான் பேசினான்.

"அம்மா ரெடியா இருக்காங்களா ... ஆட்டோ வந்திருக்கு பூத்து கூட்டமில்லாமதான் இருக்கு, இப்பவே ஓட்ட போட்டுட்டு வந்துறலாம். நான் டீச்சர் வீட்டுலேயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துரேன். ஒரு நிமிசம்."

"..."

"நிக்குறது வேற யாரும் இல்ல, நம்ம ஒன்றியச் செயலாளர் பையன் தான், எப்படி பாத்தாலும் நம்ம பங்காளி தான்."

"..."

"இல்லடா... இந்த ஒரு தடவை வேலை பார்த்துக் கொடுங்க... அடுத்த தடவை நிச்சயமா பார்த்துப் பண்ணிரலாம்னு அமைச்சரே சொல்லியிருக்காரு."

மதுரைக்கும் தஞ்சாவூருக்கும் கடுமையான சண்டை நடந்து கொண்டிருந்த காலம் அது. உங்கள் கற்பனையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்... எதோ சேர, சோழ, பாண்டியர் கதைன்னு நினைச்சிக்காதீங்க. என்னோட கல்லூரி விடுதியில் எனக்கும், என் அறை நண்பனுக்கும் கடுமையான சண்டை நடந்து கொண்டிருந்த காலம் அது. அவன் தஞ்சாவூர் பக்கம், நான் மதுரைப் பக்கம். எங்க இரண்டு பேருக்கும் யார் ஊரு பெருசுன்னு (!) அடிக்கடி சண்டை நடக்கும். அவன் எங்க ஊரைப் பத்தி கேவலமா பேசுவான் பதிலுக்கு நான் அவன் ஊரைப்பத்தி ரெம்ப கேவலமா பேசுவேன்.


பெரும்பாலும் அறைக்குள் மட்டும் நடக்கும் சண்டை என்னமோ தெரியல அன்றைக்குப் பார்த்து டி.வி பார்க்கும் அறையில் ஆரம்பித்து விட்டது. அட இது நல்லாயிருக்கேன்னு எல்லாரும் டி.வி-ய விட்டுட்டு எங்க சண்டைய பார்க்க ஆரம்பிச்சுடாங்க... அங்கங்க நியாத்துக்கு குரல் கொடுக்குறதுக்குண்ணே ஒரு நாலு பேரு இருப்பாங்களயா அதுல ஒருத்தன் என் பக்கமா பேச ஆரம்பிச்சான், அவன் திண்டுக்கல். நீ.. திண்டுக்கல்காரன் ... நீ பேசாதேன்னு சொன்னவுடனே வந்தது பாரு கோபம்... ஏன்டா எக்மோர் வேற சென்னை வேறயா... அவனும் மதுரைக்காரன் தான்டா... ஒரு ஏறு ஏறினேன்.


அப்புறம் நேரம் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமா தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடின்னு பெரிய கூட்டமா கூடிப் போச்சு...ரெம்ப பாசக்கார பசங்கய்யா. அவனும் ஒத்தையாள எவ்ளோ நேரம் தான் தாக்குப்பிடிப்பான். ஒரு கட்டத்துல போங்கடா போங்கா நீங்களும் உங்க மதுரையும்.... வோர்ல்ட் மேப்ப எடுத்து மதுரைய சுத்தி ஒரு அடிக்கு காம்பஸ் வச்சு வட்டம் போட்டுங்கங்கடா... எல்லாரும் மதுரைக்காரன்டா...ன்னு சொல்லிட்டு போய்ட்டான்.


மனசுக்கு ரெம்ப கஷ்டமாயிருச்சு ... நம்ம மதுரைக்காரன்னு தெரியாம அவன இந்த ஓட்டு ஓட்டிடேம்னு தான். அதானே ... கனியன் பூங்குன்றனார் சும்மாசொல்லியிருக்க மாட்டார்ல ?

இந்த (வலைப்)பூவுலகத்தில் எனக்கென்று ஒரு வீடு தேடி வலை வலையாய் அலைந்து திரிந்து கடைசியில் இரண்டில் ஒன்று என்று முடிவு செய்தாயிற்று ... இரண்டில் ஒன்று 'ப்ளாக்கர்.காம்' மற்றொன்று 'வோர்ட்பிரஸ்.காம்'. இனி இந்த நிறுவனங்கள் வழங்கிவரும் இலவச சேவை பற்றிய ஒரு ஒப்பீடு.


வீட்டை பூஜையறை, சமயலறை, குளியலறை என்றுப் பிரித்து வைப்பது போல உங்கள் பதிவுகளை பல பிரிவுகளாய் வகைப்படுத்தி கொள்ள முடிந்தால் நன்றாகத்தானிருக்கும்... வேர்ட்பிரஸில் இதை அழகாய் செய்ய முடிகிறது. உதாரணத்திற்க்கு நீங்களும் மாய்ந்து மாய்ந்து கதை, கவிதை, கட்டுரைன்னு எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், ஆனால் நீங்கள் எழுதும் நகைச்சுவைத் துணுக்குகள் தான் வாசகனுக்குப் பிடிக்கின்றது என்றால் அதை மட்டும் தேர்ந்தெடுந்து படிப்பதென்பது வோர்ட்பிரஸ்-ல் சுலபம், அதுவே ப்ளாக்கர்-னா தாவு தீர்ந்து போயிரும்.


பெரும்பாலான குடியிருப்பு வீடுகளில் செல்லப் பிராணிகளுக்கு அனுமதி இருக்காது அது அவர்களே விரும்பினாலும் கூட. எறக்குறைய பெரும்பாலான வலைப்பதிவு சேவைகளில் பதிவுகளுக்கு மட்டுமே அனுமதி, அதிகபட்சமாக நிழற்ப்படங்கள், கோப்புகளை வலையேற்ற வேண்டுமெனில் வேறு சேவைகளைத்தான் தேட வேண்டும். ஆனால் வோர்ட்பிரஸ் பதிவுகளோடு கோப்புகளையும் வலையேற்ற வசதியளிக்கிறது.


வோர்ட்பிரஸில் உங்கள் வலைப்பூவை மட்டுமல்ல உங்கள் வலைப் பதிவுகளையும் கடவுச்சொல் கொண்டு பாதுகாத்துக் கொள்ள முடியும், உங்கள் பதிவின் வாசகர்களைக் கூட நீங்களே தீர்மாணிக்கலாம். இவைத் தவிர உங்கள் வலைப் பதிவுகளை 'தேடு இயந்திரங்களுக்கு' அளிப்பதா வேண்டாமா என்று கூட நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.


மறுமொழிகள் மட்டுறுத்தலில் ப்ளாக்கரை விட வோர்ட்பிரஸ் சிறப்பான வசதிகளை அளிக்கிறது. உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களின் (!) மறுமொழி ஒவ்வொரு முறையும் உங்கள் மட்டுறுத்தலுக்காக காத்திருக்க தேவையில்லை, நீங்கள் ஒரு முறை மறுமொழி அனுமதித்து விட்டால் மட்டுமே போதும்... பழகியவர்களை மட்டும் அனுமதிக்கும் வீட்டு நாய் மாதிரி. இது தவிர மறுமொழி இட்டவர்களின் ஐ.பி முகவரி உட்பட அனைத்து தகவல்களையும் மோப்பம் பிடித்து தந்து விடும்.


ம்ம்... அப்புறம் ...


நல்ல நாள், பெரிய நாள் காட்டுகின்ற 'நாட்க்காட்டி' மாதிரி நீங்க பதிவு போட்ட நல்ல நாளை(?) குறித்து வைத்துக் காட்டும் ஒரு 'நாட்க்காட்டி'...


உங்கள் வீட்டிற்க்கு எத்தனை பேர் வந்தார்கள், யார் சொல்லி வந்தார்கள், எதனைத் தேடி வந்தார்கள் போன்ற விவரங்களை நாள் வாரியாக, மாத வாரியாக அளிக்கும் ஒரு வருகைப் பதிவேடு ...


வீட்டிற்க்கு முன்னால் இருக்கும் இடத்தில் பூந்தோட்டம் போடுவது, சின்ன விளையாட்டு இடம் அமைப்பது போல, வோர்ட்பிரஸ்-ல் வலைப் பதிவுகள் மட்டுமல்லாமல் தனிப்பக்கங்களையும் (உங்களைப் பற்றி ...உங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளின் பட்டியல் ...) உருவாக்கிக் கொள்ள முடிகிறது...


ஆனா இருக்கின்ற வீட்டை மாற்றுவதெல்லாம் கடினமல்லவா? மலைப்பான கரியம் தான். ஆனால் வோர்ட்பிரஸில் இது சுலபம். ஊங்களது தற்ப்போதைய வலைப்பூவின் உரலை கொடுத்தால் போதும், அனைத்துப் பதிவுகளையும் மறுமொழிகளுடன் வோர்ட்பிரஸில் சேர்த்துவிடும். அவ்வப்போது உங்கள் வோர்ட்பிரஸ் வலைப்பதிவுகளை உங்கள் கணிணிக்கும் பிரதி எடுத்துக் கொள்ளலாம்.


எல்லாம் சரிதான், ஆயிரம் வசதி செய்து கொடுத்தாலும் இங்கு ஆணி அடிக்க கூடாது, அங்கு அதை மாட்டக் கூடாது சொல்லுகின்ற வீட்டுக்காரர் மாதிரி வோர்ட்பிரஸ்-ல் அடைப்பலகைகளில் மாற்றம் செய்ய அனுமதி இல்லை (பாதுகாப்பு காரணங்களை மேற்க்கோள் காட்டுகிறார்கள்), அடைப்பலகையின் பக்கவாட்ட்டில் மட்டும் ஒரு சிலவற்றை இணைக்க/மாற்ற அனுமதிக்கிறார்கள். இங்கேதான் ப்ளாக்கர் நிற்க்கிறது... இது உங்கள் சொந்த வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் விரும்பியதை செய்து கொள்ளுங்கள் என்று சொல்லும் பெரிய மனசு கொண்ட வீட்டுக்காரர். உங்கள் வலைப் பக்கத்தை உங்கள் விருப்பம் போல் அமைத்துக் கொள்ளும் வசதி மட்டுமல்ல, பெரும்பாலன தமிழ் வலைப் பதிவர்கள் ப்ளாக்கர் சேவையை சார்ந்திருப்பதால் தமிழ் மணம் வழங்கும் 'கருவிப் பட்டை', தேன் கூடு வழங்கும் மறுமொழி சேகரிப்பு போன்ற வசதிகளை பெறுவது சுலபம்.


நீங்கள் தனி மரம் அல்ல தோப்பு !


ஆயிரம் தான் சொல்லுங்கள், மகிழ்ச்சி என்கிறது வீட்டிலா இருக்கின்றது ... வீட்டில் இருக்கின்றவர்களிடமல்லவா...! நல்ல பதிவுகளை எதிர் நோக்குவோம்.


மகிழ்ச்சி!!!


கொசுறு: இது இன்றைய நிலைதான்... நாளைக்கோ இல்லை நாளை மறுநாளோ கூட நிலைமை மாறி விடக்கூடும் (என் வலைப்பூ முகவரி உட்பட) ... போட்டி நிறைந்த இந்த உலகத்தில் வலியதே வெல்லும் ... நானும் இந்த பதிவை ப்ளாக்கர் beta விலும் ஒரு பிரதி எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

தூண்டுகோல்

தேடி சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பம் மிக உழன்று - பிறர்
வாட பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரை எனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரை போல - நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ ?

- மகாகவி பாரதியார்.