வோர்ட்பிரஸ்.காம் பதிவுகளை அண்மையில் மறுமொழியப்பட்டவை பகுதியில் திரட்டுவது எப்படி? - PoC
1 comments Posted by இன்பா (Inbaa) at 5:01 PMவோர்ட்பிரஸ்.காம் (www.wordpress.com) வலைத் தளத்திற்கு மாற முடிவெடுத்து சற்றே தயங்கி நிற்பவர்கள் அல்லது வோர்ட்பிரஸ்.காம் க்கு வலைப்பதிவை மாற்றி விட்டு மீண்டும் ப்ளாக்கருக்கே (www.blogger.com) திரும்பி விடாலாமா என்று யோசிப்பவர்களிடம் காரணம் கேட்டிருக்கிறீர்களா?
ஆயிரம் காரணம் சொல்லலாம், அதுல இதுவும் கண்டிப்பாய் இருக்கும்.
வார்ப்புருக்களில் திரட்டிகள் (தமிழ்மணம், தேன்கூடு) அளிக்கும் நிரலை சேர்க்க முடியாமை.
இப்பொழுதெல்லாம் பதிவு போட்டா... பத்து நிமிடத்திற்கு மேல் திரட்டிகளின் முகப்பில் இருந்தாலே பெரிய விசயம், இல்லை பதிவு கொஞ்சமாவது சூடா இருக்கனும் (ஐஸ்கிரீம் சாப்பிடுவது எப்படி? பதிவானாலும் சரி). அதெல்லாம் நமக்கு சரியா வராதுன்னு சொல்றவங்க, ' நமக்கு நாமே திட்டப்படி' தனக்கு தானே மறுமொழி இட்டாவது முகப்பில் உள்ள 'அண்மையில் மறுமொழியப்பட்டவை' பகுதியில் முகம் காட்டிக் கொள்ளலாம். ஆனா வோட்பிரஸ்.காம் பதிவர்களுக்கு இது கூட சாத்தியமில்லை.
அதெல்லாம் தான் தெரியுமே ... வோர்ட்பிரஸ் பதிவுகளை அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகளில் தெரிய வைப்பது எப்படி? வோர்ட்பிரஸ்.காம் பதிவுகளின் மறுமொழியை திரட்டிகளால் அவர்கள் அளிக்கும் ஜாவாஸ்கிரிப்ட (Javascript) நிரல்களை இணைக்காமல் திரட்ட முடியாதா?
வோர்ட்பிரஸ், ப்ளாக்கர் இரண்டுமே மறுமொழிகளுக்கான ஓடையினையும் (RSS feed for comment) அளிக்கின்றன, இந்த ஓடைகளின் மூலமாக சேகரிக்கலாம். ஆனால் 2000 பதிவுகளை தானியக்கமாக ஒன்றன் பின் ஒன்றாக அலசி சேகரிப்பதானால் ஒரு சுழற்சிக்கு குறைந்த பட்சம் 15-20 நிமிடங்கள் ஆகக்கூடும். தற்போதைய 2000 பதிவுகள் எதிர்காலத்தில் 10,000 ஆகும் பட்சத்தில்...?
எனவே பதிவுகள் தாங்களாகவே தங்களின் மறுமொழி நிலவரத்தை திரட்டிகளுக்கு அறிவிக்கும் தற்போதைய முறையே சிறந்தது. சரி இதை வோட்பிரஸில் எப்படி செய்வது?
வோர்ட்பிரஸ்.காம்-ன் வார்ப்புருவில் (Template) எந்த நிரலையும் பயன்படுத்த அனுமதியில்லை என்பது சரி தான், ஏதோ போனாப் போகுதுன்னு படங்களை மட்டும் வார்ப்புருவில் இனைத்துக் கொள்ள மட்டும் அனுமதி அளித்திருக்கிறார்கள். இது போதாதா நமக்கு ... தூள் கிளப்பலாம்ல ...
உதாரனத்திற்கு ...
< img width="1px" src="http://www.url.com/ping.cgi/flower.jpg" / >
என 'Text Widget' - ல் அல்லது 'Links' இனைத்துக் கொள்ளலாம்.
(Hack -la இது தாத்தா காலத்து டெக்னிக்)
இனி ஒவ்வொரு முறை பதிவுக்கு செல்லும் போதும் இந்த நிரல் திரட்டியில் உள்ள ping.cgi என்னும் நிரலியை அழைக்கிறது. (flower.jpg எல்லாம் ச்சும்மா) . இனி திரட்டியில் உள்ள ping.cgi நிரலி செய்ய வேண்டியது, அந்தப் பதிவின் செய்தியோடையிலிருந்து தனக்குத் தேவையான மற்ற விவரங்களை (மறுமொழி எண்ணிக்கை ...) எடுத்துக் கொண்டு மறுமொழி சேகரிப்பு செயலிக்கு அறியத் தருவது.
கொஞ்சம் தலையச் சுத்தி மூக்க தொடுற மாதிரி தான், சுருக்கமா சொல்றதுன்னா ...
ப்ளாக்கருக்கான நிரல் பதிவின் உரல், மறுமொழி எண்ணிக்கை, நேரம் ஆகியவற்றை திரட்டிக்கு அளிக்கிறது.
அதற்குப் பதில் வோட்பிரஸ்-க்கு ஆன இந்த முறை பதிவின் உரலை மட்டும் திரட்டிக்கு அளிக்கிறது, திரட்டி தனக்கு தேவையான மற்ற விவரங்களை (மறுமொழி எண்ணிக்கை ...) ஒடைகளிலிருந்து (RSS) பெற்றுக் கொள்ளும்.
PoC:
Labels: வலைப்பதிவு
முதல் பகுதி
ஆப்ரா (Opera) :
நெடுங்காலமாகவே களத்திலிருந்தாலும், பெரும்பாலும் மூன்றாவது நான்காவது இடத்திலே தான் இருந்திருக்கிறது. விண்டோஸ்(Windows), மேக்(Mac), லினக்ஸ்(Linux), சோலாரிஸ்(Soalaris) மட்டுமல்லாமல் செல் பேசிகள் (Cell Phones), Nintendo WII போன்ற விளையாட்டு சாதனங்கள் என எல்லா இடங்களிலும் இருப்பை பெருக்கி கொள்ள ஆரம்பித்துள்ளது ஆப்ரா.+
விரைவுச் சுழற்றி (Speed Dial):
குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது மாதிரி, ஒரு குறிப்பிட்ட வலைத் தளங்களுக்கு தொடர்ந்து மாறி மாறி செல்லும் வழக்கம் உள்ளவர்களுக்கு இது கலக்கலான வசதி. நீங்கள் அடிக்கடி விரும்பிச் செல்லும் பக்கங்களை இதில் தொகுத்துக் கொள்ளலாம். உலாவியை/புதிய கீற்றை (Tab) திறக்கும் போது உங்கள் விருப்ப பக்கங்களை துண்டுக் காட்சிகளாக (Thumbnail Preview) தொகுத்துக் காட்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு விசைப்பலகை குறுக்கு வழியையும் (Keyboard Short Cut) அமைத்துக் கொள்ளலாம்.
கீற்று காட்சி (Tab Preview):
திறந்து கிடக்கும் பத்து பதினைந்து கீற்றுகளில் எதேனும் ஒரு கீற்றை தேட வேண்டுமெனில் ஒவ்வொரு கீற்றின் கதவையும் தட்டிப் பார்க்க வேண்டியதிருக்கும். ஆப்ரா உலாவியில் கலைந்து கிடக்கும் கீற்றுகளில் ஏதேனும் ஒன்றை தேடுவது மிகச் சுலபம் கணிணி சுட்டியை (Mouse) கீற்றின் மேல் கொண்டு சென்றால் அந்தப் பக்கத்தினை ஒரு துண்டுக் காட்சியாக காட்டும். ஆனால் ஃபயர்ஃபாக்ஸ்-ல் இந்த வசதியை பெற நீட்சியை (Add on) தரவிறக்கம் செய்ய வேண்டும்.
குரல் வழி உலாவி (Voice Browsing):
தற்போதைய உலாவிகளில் ஆப்ராவில் மட்டுமே இந்த குரல் வழியாக உலாவும் வசதி உள்ளது. புதிய கீற்றை திறப்பது - மூடுவது, பின்னோக்கி - முன்னோக்கி செல்வது, பக்கத்தினை பெரிது - சிறிது படுத்திக் காட்டுவது, நீங்கள் தெரிவு செய்ததைப் படித்து காட்டுவது மற்றும் இன்ன பிறவற்றையும் குரல் வழி கட்டளைகளின் மூலமே செய்து கொள்ளலாம். இப்போதைக்கு உங்களுக்கு ஆங்கிலமும், உங்களுடைய ஆங்கிலம் அதற்கும் தெரிய வேண்டும். அவ்வளவே! இல்லேன்னா 'சொன்னபடி கேளு ... மக்கர் பண்ணாதே ...' பாடனும்.
குப்பைத்தொட்டியும், குறிப்பேடும் (Trash & Notes):
"கொஞ்சம் போன் நம்பர் குறிச்சிக்கிறீங்களான்னு" யாரவது கேட்கும் போது தான் 'நிராயுத பாணியாக' பேந்த பேந்த முழித்துவிட்டு அப்புறம் கைக்கு கிடைக்கிறது இல்ல ஹமாம் சோப் போட்ட கையிலோ எழுதி 'தொலைப்போம்'. வலை உலாவும் உங்கள் கண்ணுல படுற விசயங்கள கண்ட கண்ட இடத்துல எழுதாம் வலை உலாவியிலேய குறித்துக் கொள்வதற்காக ஒரு குறிப்பேடு வசதியும் உள்ளது.
அப்புறம் நீங்கள் படிச்சு கிழிச்சுப் போட்ட பக்கங்களையெல்லாம் சேகரிக்க ஒரு குப்பைத் தொட்டி. தவறுதலாக மூடிய கீற்று மற்றும் பக்கங்களை இங்கே இருந்து மீட்டுக் கொள்ள முடியும்.
W3C ( World Wide Web Consortium ) ன் பல பரிந்துரைகள் முழுமையாக நிறைவேற்றப் பட்டிருக்கின்றன.
இவைத் தவிர நிரல் பலகை(Widgets), கோப்பு பகிர்வு (Bit Torrents), கணிணி சுட்டியின் அசைவுகளில் பக்கங்களை புரட்டிப் போடுதல் (mouse gestures), போலி உரல் (url) கள் மூலம் உங்கள் அடையாங்களை திருடப்படுவதை தடுக்கப் பாதுகாப்பு வசதிகள் என பல. உங்களுக்கு வேண்டிய வேண்டாதவற்றை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம் (Highly Customizable).-
- செயல் திறன் சஃபாரி மற்றும் ஃபயர் ஃபாக்ஸ் உடன் ஒப்பிடும் போது சற்று பின் தங்கியே உள்ளது.
- அதன் மஞ்சள் நிற நீட்சிப் பட்டை (Scroll Bar).
சஃபாரி (Safari) :
வலை உலாவி சந்தையில் 'சஃபாரி' உலாவியின் பங்கை அதிகரிப்பதின் முதற் கட்டமாய் கடந்த ஜீன் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் 'விண்டோஸ்' இயங்குதளத்திற்கான் 'சஃபாரி' உலாவியின் சோதனைப் பதிப்பினை (Beta) வெளியிட்டது. 'மேக்' (Mac - OSX) இயங்குதளங்களில் மட்டுமே இது வரை கோலோட்சி வந்த 'சஃபாரி' இப்போது 'விண்டோஸ்' இயங்குதளத்தில் ...
+
செயல் திறன் (Performance):
ஆப்பிள் நிறுவனத்திற்கு இதற்கு முன் 'விண்டோஸ்' இயங்குதளத்தில் ' ஐ -டியூன்ஸ்(iTunes)' என்ற மென்பொருளை (Software) வடிமைத்த அனுபவம் மட்டுமே உள்ளது, இருந்த போதிலும் கூட எடுத்த எடுப்பிலே 'விண்டோஸ்' இயங்கு தளத்தில் மற்ற எந்த உலாவியை விடவும் அதி வேகமும், மிகுந்த செயல் திறனமும் மிக்கதாய் 'சஃபாரி' யை முன் வைக்கிறது. ஏறக்குறைய 'இண்டர்நெட் எக்ஸ்புளோரரை' விட இரு மடங்கு வேகமாகவும் ஃபயர் ஃபாக்ஸை விட 1.5 மடங்கு வேகமாகவும் பக்கங்களை தரவிறக்கம் (Load) செய்கிறது. ஜாவாஸ்கிரிப்ட் (Javascript) மற்றும் செயலியை துவக்குதலில் (Application Launch) மட்டும் 'ஆப்ரா' ஒரளவு கடும் போட்டியை கொடுக்கின்றது.
(இந்த சோதனை முடிவுகள் ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டவை என்றாலும், யார் வேண்டுமானாலும் இச்சோதனைகளை நடத்தி முடிவுகளை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.)
இரகசியமானது ... (Private Browsing):
உங்கள் அந்தரங்கங்கள், இரகசியங்களுக்கு மதிப்பளித்து இந்த வசதியளிக்கிறது சஃபாரி. இந்த வசதியை முடுக்கிவிட்ட (Edit -> Private Browsing) பின்னர் நீங்கள் வலையில் உலாவும் போது நீங்கள் செல்லும் வலைத் தளங்கள் மட்டுமில்லாது, கூகுள் போன்ற தேடு இயந்திரங்களில் தேடிய வார்த்தைகள், தரவிறக்கம் செய்த கோப்புகள், படிவங்களில் பயன்படுத்திய விவரங்கள் போன்ற எதனையும் சேமிப்பதில்லை.
அது சரி, ஃபயர் ஃபாக்ஸ் போன்ற உலாவியில் உள்ள 'உலாவி நடவடிக்கைகளை நீக்கு' (Clear History) க்கும் இதற்கும் என்ன பெரிய வித்தியாசம் என்று கேட்கிறீர்களா? உலாவி நடவடிக்கைகளை நீக்கு' (Clear History) உலாவியில் உங்கள் நடவடிக்கைகளை எல்லாம் ஒட்டு மொத்தமாக அழித்து விடும். ஏறக்குறைய துவைத்துக் காயப் போட்ட மாதிரி, ஆனால் சஃபாரியில் நீங்கள் 'இரகசிய உலாவுதலை (Private Browsing)' முடுக்கி (enable) விடுவதற்கு முன்னால் பார்த்த வலைப் பக்கங்கள் போன்ற விவரங்கள் இருக்கும், இந்த வசதியை முடுக்கி விட்ட பின்னர் நடப்பவை மட்டும் சேகரிக்கப்படாது. தப்பு செய்யும் போது சந்தேகம் வராத மாதிரி செய்யனும் இல்ல?
மாற்றத்தக்க எழுத்துப் பகுதி(Resizable Text Field):
சில தளங்களில் ஒரு கட்டுரை அளவுக்கு எழுத வேண்டிய விசயத்துக்கு தம்மா துண்டு எழுத்துப் பகுதியை (Text Field) ஒதுக்கியிருப்பார்கள். அதிலும் எழுதியதைப் படிக்கனும்னா அவ்வளவு தான். சஃபாரியில், கணிணி சுட்டியைக் கொண்டு எழுத்துப் பகுதியை தேவையான அளவுக்கு பெரிதாக்கவோ, சிறிதாக்கவோ முடியும்.
வண்ணக்கலவை(Color Management):
சஃபாரி வலை உலாவி தற்போது வழக்கத்தில் உள்ள மற்ற எந்த வலை உலாவியை விடவும் படங்களை (images) மிகத்துல்லியமாக, நுணுக்கமாக, ஆழ்ந்த வணணங்களுடன் காட்டுகின்றன. இதற்கு காரணம் சஃபாரி பயன்படுத்தும் வண்ணக் கலவை முறை. பெரும்பாலான மற்ற வண்ண உலாவிகள் sRGB முறையையே பயன்படுத்துகின்றன. ஃபயர் ஃபாக்ஸ் தனது 3.0 பதிப்பில் இது போன்ற மேம்படுத்தப்பட்ட வண்ண வசதியை அளிக்கவிருக்கிறது.
துரித பின்செல் (snap back):
ஒரு பக்கத்திலிருந்து துவங்கி பத்து பதினைந்து பக்கங்கள் சென்ற பிறகு மீண்டும் துவங்கிய பக்கத்திற்கு செல்ல ஒவ்வொரு பக்கமாக பின்னோக்கி (Back) செல்ல வேண்டியதில்லை, துரித பின்செல் பொத்தானை (snap back button) அழுத்தினாலே போதும் நீங்கள் துவங்கிய பக்கத்திற்கு கொண்டு செல்லும். இது போன்றதொரு வசதி (Fast Forward) ஆப்ராவிலும் உள்ளது ஆனால் அவ்வளவு தெளிவாக அல்ல.
இவைத் தவிர, உங்கள் புத்தகக் குறிப்புகளை (Bookmarks) மற்ற எந்த உலாவியை விடவும் மிக அழகாக ஒழுங்குப் படுத்திக் கொள்ள முடிகிறது. ஐ-டியூன்ஸில் (iTunes) பாடல்கள், புகைப் படங்களை வரிசைப்படுத்துவது போன்று செய்ய முடிகின்றது. ஃபயர் ஃபாக்ஸைப் போன்ற ஆனால் சற்றே மேம்படுத்தப் பட்ட பக்க வரிசை தேடல் (inline Search), வலைத் தளங்களில் உள்ள படிவங்களை தானியக்கமாக நிரப்புவது (Auto Form Fill), மிகச் சிறந்த பாதுகாப்பு வசதிகள் என வலம் வருகிறது சஃபாரி.
-
- சில பாதுகாப்பு குறைபாடுகள், வெளிடப்பட்ட அன்றே சில குறைபாடுகளும் வெளிவந்துவிட்டன.
- நம்பகத் தன்மை, சோதனைப் பதிப்பு என்பதாலோ சில சமயங்களில் செயலிழக்கிறது, முழுமையான் பதிபிற்காக காத்திறுக்க வேண்டும் போல.
- ஒருங்குறி வசதி இன்னும் முழுமையடையவில்லை.
இண்டர்நெட் எக்ஸ்புளோரர் ஒன்றும் தீண்ட தகாத உலாவி அல்ல, சொல்லப் போனால் மற்ற எந்த உலாவியை விடவும் ஒழுங்குறி பயன்பாட்டு பக்கங்களை சிறப்பாகவே காட்டுகிறது. ஆனால் அது மட்டுமே போதாது அல்லவா ... மற்ற வலை உலாவிகளெல்லாம்,
- வலைப் பக்கம் தரவிறக்கம் அடைவதை காட்டுவதற்காக மட்டும் ஒரு பட்டையை (Status Bar) தனியாக பயன் படுத்தாமல், உரல் முகவரி பட்டையிலேயே (Address Bar) காட்டுவது (ஆப்ரா, சஃபாரி) ,
- தேவையான சமயத்தில் மட்டுமே நீட்சிப் பட்டையை (Scroll Bar) காட்டுவது (ஆப்ரா, சஃபாரி, ஃபயர் ஃபாக்ஸ், நெட்ஸ்கேப் நேவிகேட்டர்),
- புதுப்பித்தல்(Refresh), நிறுத்து(Stop) பொத்தான்கள் (Buttons) என இரண்டிற்குப் பதில ஒரே பொத்தானே சூழலுக்கு ஏற்ற மாதிரி புதுப்பித்தல் பொத்தானாகவும், நிறுத்து பொத்தானாகவும் மாறிக் கொள்வது (Boolean) (ஆப்ரா, சபாரி, நெட்ஸ்கேப் நேவிகேட்டர்).
இவ்வளவு வசதிகளும், பயன்பாடுகளும் சரி, கணிணி நினைவகத்தில் (RAM Usage) எவ்வளவு கொள்ளளவு ஆக்கிரமிக்கின்றன? ஒவ்வொரு உலாவியிலும் 5 வலைத் தளங்களை வெவ்வேறு கீற்றுகளில் திறந்து ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தலில் ஆப்ரா(24,740K) குறைந்த அளவே நினைவகத்தை பயன்படுத்துகிறது, அதற்கு அடுத்து அடுத்தாற் போல் சஃபாரி(32,904K), ஃபயர் ஃபாக்ஸ்(66,028K), நெட்ஸ்கேப் நேவிகேட்டர்(84,296K).
உங்கள் தெரிவு ?
நீண்ட காலத்திற்குப் பிறகு இண்டர்நெட் எக்ஸ்புளோரர் (Internet Explorer) வலை உலாவி (Browser) தனது போட்டியாளர்களிடமிருந்து (ஆமாம் 'பலர்பால்'!) கொஞ்சம்(!) கடுமையான போட்டியை எதிர் கொள்கிறது. மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 6.0 பதிப்பை வெளியிட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்தே அதன் அடுத்த பதிப்பான இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0 வை வெளியிட்ட போதும் இன்னும் வலை உலாவி சந்தையில் 82 சதவிகிதத்தை தன் வசம் வைத்திருக்கிறது. முன்பு 'நெட்ஸ்கேப்' பும் (Netscape) சமீப காலமாய் ஃபயர்ஃபாக்ஸ்(Firefox) மட்டுமே இண்டர்நெட் எக்ஸ்புளோரருடன் ஒத்தைக்கு ஒத்தையாய் நின்றிருந்தன. இன்றைக்கு நிலைமை வேறு ...
ஃபயர்ஃபாக்ஸ் 2 , ஆப்ரா 9.2 (Opera), 'காணாமல் போனவர்கள்' பட்டியலில் இருந்த 'நெட்ஸ்கேப்' நிறுவனத்தின் நெட்ஸ்கேப் நேவிகேட்டர் 9, மற்றும் ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்திற்கான 'சஃபாரி' (Safari) என மாற்றத்திற்கான தெரிவுகள் பல. இனி இந்த வலை உலாவிகள் பற்றிய ஒரு அலசல், நிறைய நிறைகள் மற்றும் குறைகள் உங்கள் பார்வைக்கு ...
ஃபயர் ஃபாக்ஸ் (Firefox):
இன்றைக்கு இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் முதன்மைப் போட்டியாளர், கீற்று உலாவுதல் (Tab Browsing), தேடு இயந்திரங்களை உலாவியுடன் ஒருங்கிணைத்தல் போன்ற வசதிகளை பயனாளர்களிடம் பிரபலபடுத்திய பெருமை ஃபயர் ஃபாக்ஸையே சாரும். பெரும்பாலான உலாவிகள் ஃபயர் ஃபாக்ஸின் வடிவமைப்பையே கையாளுகின்றன என்ற வகையில் ஃபயர் ஃ பாக்ஸ் மற்ற உலாவிகளுக்கு ஒரு முன்னோடி.+
வேகம் & விவேகம்:
வலை உலாவிகளில் வேகமான அதே சமயம் மிகப் பாதுகாப்பான வலை உலாவி ஃபயர் ஃபாக்ஸ். போலி உரல்கள் மூலம் நடைபெறும் அடையாளத் திருட்டைத் தடுக்க தகுந்த பாதுகாப்பு வசதிகள் (Built in Anti Phishing Filter) இருக்கின்றன. அதே சமயத்தில் புதிய கீற்றுகளை திறப்பது/ பக்கங்களை தரவிறக்கம் செய்வதில் இண்டர்நெட் எக்ஸ்புளோரரை விட அசாத்திய வேகத்துடன் செயல்படுகிறது.
உலாவுத் தொடர் மீட்சி (Browser Session Resume):
நீங்கள் ஃபயர் ஃபாக்ஸ் உலாவியில் உலாவும் போது உங்கள் இயங்கு தளம் (OS) அல்லது உங்கள் உலாவி் செயலிழந்து விட்டால், மறுமுறை உங்கள் உலாவியை திறக்கும் போது, நீங்கள் கடைசியாக திறந்த கீற்றுக்களை(Tab)/ பக்கங்களை(pages) மீட்டுக் கொள்ள முடியும்.
நீட்சிகள் (Add-ons):
ஃபயர் ஃபாக்ஸ்-ன் மிகப் பெரிய பலம் அதன் நீட்சிகள்(Add-ons). ஃபயர் ஃபாக்ஸின் நீட்சிகளைப் பயன் படுத்துவதன் மூலம் எண்ணற்ற புதிய வசதிகளை ஃபயர் ஃபாக்ஸில் பெற முடியும். உதாரணமாக, கீற்றுகளின் துண்டுக் காட்சி (Tab Preview), புதிய அகராதிகள் (Dictionary), மொழி மாற்றி (Languages), புதிய வடிமைப்பு (Themes) இன்னும் பல.
பிழை திருத்தி (Spell Checker):
வலைப் பக்கத்தின் எழுத்துப் பகுதியில் (Text Area) நீங்கள் எழுதும் போது உங்களின் எழுத்துக்களை சரி பார்த்துப் பிழைகள் இருப்பின் சரி செய்ய ஆலோசனைகளையும் அளிக்கின்றது.
பக்க வரிசைத் தேடல் (Inline Search):
இண்டர்நெட் எக்ஸ்புளொரரில் ஒரு வலைப் பக்கத்தில் ஏதேனும் ஒரு வார்த்தைய தேட வேண்டுமெனில், தேடு சாரளத்தை (Window/Dialog) புதிதாக துவக்க வேண்டும், சில சமயங்களில் நாம் தேடிய வார்த்தை இந்த சாரளத்தின் பின்னாலே கூட மறைந்து கொள்ள கூடும். ஆனால் அந்தப் பிரச்சனையெல்லாம் ஃபயர் ஃபாக்ஸில் இல்லை. இதில் உள்ள பக்க வரிசைத் தேடலில் (inline search) புதிய் சாரளம் தேவையில்ல, அந்தப் பக்கத்தின் கீழ் பகுதியிலேயே தேடு சொற்களை உள்ளீடு செய்யும் வசதி அளிக்கிறது. உங்கள் தெடு சொற்கள் மறைந்திருக்குமோ என்ற கவலையும் தேவையில்லை.
இவைத் தவிர தேடு இயந்திரங்கள் ஒருங்கிணைப்பு(Search Engines), தரவிறக்கம் செய்த பகுதிகளை ஒழுங்கு படுத்தி சேமிக்க (Download Manager), ஜாவாஸ்கிரிப்ட் 1.7 வசதி, புதிய மேம்பாடுகளை தானியக்கமாக நிறுவிக் கொள்ளுதல் (Automatic update) என வசதி வாய்ப்புகள் எக்கச்சக்கம்.-
- ஃபயர் ஃபாக்ஸ் 1.5 லிருந்து 2.0 பதிப்பை வெளியிட்ட போது நிறைய எதிர்பார்ப்புகள் நிறைவேறாமலே போனது. மேலும் பல ஃபயர் ஃபாக்ஸ் 1.5 நீட்சிகள் 2.0 வில் வேலை செய்வதில்லை.
- W3C (World Wide Web Consortium ) ன் பல பரிந்துரைகள் முழுமையாக நிறைவேற்றப் படவில்லை.
- கீற்றுகளின் துண்டுக்காட்சி (Thumbnail Preview) இல்லாத்து குறையே, என்றாலும் நீட்சிகளின் மூலம் ஆறுதல் அடைந்து கொள்ளலாம்.
- ஃபயர் ஃபாக்ஸ நீக்கி (Uninstaller) அதன் கோப்புகளை இயங்கு தளத்திலிருந்து முழுமையாக நீக்குவதில்லை.
நெட்ஸ்கேப் நேவிகேட்டர் (Netscape Navigator):
ஒரு காலத்தில் இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் நேரடிப் போட்டியாளராக இருந்து பின்னர் கொஞ்சம் காலம் காணாமல் போயிருந்த 'நெட்ஸ்கேப் நேவிகேட்டர்' கடந்த மாதம் தனது நெட்ஸ்கேப் நேவிகேட்டர் 9.0 பதிப்பினை வெளியிட்டுள்ளது. நெட்ஸ்கேப் நேவிகேட்டர் 9.0 'மோஸில்லா' வின் கட்டமைப்பையே (Mozilla Framework) பயன் படுத்துகிறது.
"நெட்ஸ்கேப் = ஃபயர் ஃபாக்ஸ் - சில ஃபயர் ஃபாக்ஸ் வசதிக்ள் + சில புதிய வசதிகள்".
'குமுதம்' இதழில் வெளிவரும் ' 6 வித்தியாசங்கள்' பகுதி உங்களுக்கு பிடிக்குமானால் 'நெட்ஸ்கேப் நேவிகேட்டர் 9.0' யை கட்டாயம் நிறுவிப் பயன்படுத்திப் பாருங்கள், பின்னர் ஃபயர் ஃபாக்ஸ்-ம் நெட்ஸ்கேப்பும் செயல் புரியும் விதத்தில் ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிக்க முயற்சியுங்கள்.
+
உரல் பிழை திருத்தி (URL Correction):
உலாவியில் உரலை (URL) உள்ளீடு செய்யும் போது ஏற்படும் பிழைகளை தானாகவே சரி செய்து கொள்கிறது. உதாரணத்திற்கு www.googlecom அல்லது www.google.cmo என உள்ளீடு செய்தாலும் சரியாக www.google.com யை தரவிறக்கம் செய்கிறது. இது போன்று முப்பதிற்கு மேற்ப்பட்ட பிழைகளை சரி செய்கிறது.
பக்கவாட்டு உலாவிப் பகுதி (Side Bar Mini Browser):
ஒரு சுட்டியை (Link) அல்லது உரலை (url) உலாவியின் பக்கவாட்டுப் பகுதியில் திறந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் இரண்டு வலைப் பக்கங்களை பக்கம் பக்கத்தில் வைத்து ஒப்பீடு செய்து கொள்ள முடியும். ஒரே உலாவிப் பக்கத்தில் இரண்டு வலைப் பக்கங்கள்! ஃபயர் ஃபாக்ஸில் உள்ள இந்த வசதியில் புத்தகக் குறிப்புகளை மட்டுமே திறக்க முடியும்.
சுட்டிப்பேடு (Link Pad):
ஒரு வலைப் பக்கத்தில் உலாவும் போது, சில சுட்டிக்ளை (links) அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறீர்கள் என்றால் ஒன்று அந்தச் சுட்டிகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது தற்காலிகமாக உங்கள் புத்தகக் குறிப்பில் (Bookmarks) சேர்க்க வேண்டும். ஆனால் நெட்ஸ்கேப் நேவிகேட்டரில் உங்கள் புத்தகக் குறிப்புகளை குழப்பாமல் சுட்டிப்பேடில் (Link Pad) கணிணிச் சுட்டியைக் கொண்டு இழுத்துப் போட்டு விட்டு (Drag and Drop) வேலையைப் பார்க்கலாம். பின்னர் வேலை முடிந்த பின்னர் அந்தச் சுட்டிகளைப் பார்த்துக் கொள்ளலாம்.
இவைத் தவிர உங்கள் புத்தக் குறிப்புக்களை OPML கோப்புகளாக மாற்றிக் கொள்ளும் வசதியும் மற்றும் சஃபாரியில் உள்ளது போல மாற்றத்தக்க எழுத்துப் பகுதி (Resizable Text Area) ... என பல புதிய வசதிகளும் உள்ளது.
-
- ஃபயர் ஃபாக்ஸின் மறுபதிப்பு, எனவே ஃபயர் ஃபாக்ஸ் குறைபாடுகள்.
- பார்த்தாலே தூக்கம் வருகின்ற மாதிரி முகப்பு வண்ணம்/வடிவமைப்பு.
- உபயோகத்தில் உள்ள கீற்றைத் (Active Tab) தவிர மற்ற கீற்றுகளை மூட இயலாமை.
- பல மோஸில்லா நீட்சிகள் வேலை செய்வதில்லை.
ஆப்ரா, சஃபாரி பற்றி வரும் பகுதிகளில் ...