"ஒரு ஃப்ரிட்ஜ்குள்ள ஒரு யானைய எப்படி வைப்பீங்க?"
எனக்கு இன்னும் அரைமணி நேரத்துல ஒரு இண்டர்வியூ இருக்குங்க. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், இண்டர்வியூல இப்படியெல்லாமா கேக்கப் போறாங்கங்கிறீங்களா? கேட்டாலும் கேட்கலாம்... இன்னைக்கு நமக்கு நேரமே சரியில்லை, எல்லாமே நேரம் கெட்ட நேரத்துல தான் நடக்குது.
வேகாத வெயில்ல கத்திப்பாராவிலிருந்து பத்து நிமிசம் லொங்கு லொங்குன்னு நடந்து கிண்டி பஸ்டான்ட் வந்தா வெள்ளை போர்டு, மஞ்சள் போர்டுன்னு விதவிதமா 45B. ஆனா எதுலேயும் உட்கார இடமில்லை. ஐயா, பஸ்ல எல்லாம் உட்கார்ந்துட்டு தான் போவாங்களோன்னு தானே கேட்குறீங்க. எல்லாம் கேட்குது, இண்டர்வியூக்கு வரும் போதாவது கொஞ்சம் ட்ரஸ் அயர்ன் பண்ணி டீசன்டா வரக்கூடாதான்னு கூடத்தான் கேப்பீங்க.
அப்புறம் அங்க இங்கன்னு குரங்கு மாதிரி தாவி குதிச்சு ஒரு ஓரத்து சீட்டப் பிடிச்சி உக்காந்தாச்சு. உட்கார்ந்த இருபது நிமிசத்துல எந்திரிக்க சொல்லிடானுங்க. இருபது நிமிசம்னா டிரைவர் பஸ் எடுக்கறத்துக்கு முன்னாடி டீ குடிக்கப் போன பதினைஞ்சு நிமிசமும், கண்டக்டர் டிக்கட் போடுறதுக்காக வண்டிய உருட்டிக்கிட்டு போன ஒரு அஞ்சு நிமிசமும் தான். வண்டி சின்னமலையை தாண்டுறதுக்குள்ள அந்த உருட்டலும் நின்னு போச்சு. எல்லாரும் சேர்ந்து தள்ளுனதுல்ல சைதாப்பேட்டை பாலம் வரைக்கும் தான் தள்ள முடிஞ்சது. இதுவே பெரிய (சோ)சாதனை தான்.எல்லோரும் கூட்டமா கண்டக்டர சுத்திகிட்டு டிக்கெட் பின்னாடி ஆட்டோகிராஃப் வாங்க ஆரம்பிச்சுடாங்க. நாம தான் ஃப்ராகிரஸ் ரிப்போர்ட்லேயே அப்பா கையழுத்த அப்படியே போடுற ஆளாச்சே ... கண்டக்டர் கிறுக்குன மாதிரி ஒரு கிறுக்கு கிறுக்கியாச்சு.
பத்து நிமிசம் கழிச்சு ஆடி அசைஞ்சு வந்துச்சு ஒரு வண்டி அதுவும் ஓவர் லோடு ஏத்தி வாயெல்லாம் நுரை தள்ளி வர்ற மாட்டு வண்டி மாதிரி. ஏதோ ரிசர்வ் பண்ணி வச்ச கூபே இருக்கமாதிரி தான் எல்லாரும் ஓடுறாங்க.
"பின்னாடி இன்னொரு வண்டி ஃப்ரியா வருது அதுல போங்கப்பா, ஒரு பஸ்ல எப்படி ரெண்டு பஸ் கூட்டத்த ஏத்துறது?" கடுப்படித்தார் அந்த கண்டக்டர்.
"கஷ்டப்பட்டுதான்."
ஏற்கனவே கேள்விப் பட்ட கேள்வி மாதிரி இருந்துச்சா... அதான் ஒரு ஆர்வக்கோளாறுள ஏதோ குயிஸ் ப்ரோகிராம்ல பதில் சொல்ற மாதிரி சொல்லித் தொலைச்சுட்டேன். அவரும் தொலைச்சுப்புடுவேன் தொலைச்சுங்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்தார்.
நானும் இப்பக் கூட்டம் குறையும் அப்புறம் குறையும்ன்னு பார்த்துகிட்டே இருக்கேன் ஒவ்வொரு ஸ்டாப்பிலும் அஞ்சு பேரு இறங்கினா பத்து பேரு ஏறிக்கிறாங்க. அதுலேயும் இந்த ஸ்டாப்ல மட்டும் பதினைஞ்சு இருபது பேர்... எல்லாரும் காலேஜ் ஸ்டூடன்ஸ்ன்னு நினைக்கிறேன். முன்னேயும் பின்னேயும் சேர்த்து இரண்டு படிக்கட்டுகளுக்கு மேல் தேவைப்படவில்லை.
"என்ன தலீவா ... பெர்சா கூட்டத்த சேத்துகின போல..."
"இது நான் சேர்த்த கூட்டம் இல்ல அன்பால தானா சேர்ந்த கூட்டம்."
"பாத்தியா... தலீவர் டயலாக்க ..."
தலைவருக்கும் தலைவர் டயலாக் சொன்ன கண்டக்டர்க்கும் மாறி மாறி 'ஓ' போட்டார்கள்.
"ஏம்மா எங்கம்மா போற ...?"
"எஸ்.ஐ.ஈ.டி காலேஜ்."
"மாமா... காலேஜ் போற வயசப் பாத்தியா."
அலை அலையாய் சிரிப்பலை. கமெண்ட் அடிச்சது யாருன்னு பார்க்க முடியல... ஆனா அந்த அம்மாவப் பார்த்தா ஐம்பத்தி எட்டு வயசுக்கு மேல தான் இருக்கும்.
பஸ் கொஞ்சமாய் வேகமெடுத்தது. சன்னமாய் ஒலிக்கத் துவங்கிய 'கானா' சற்று நேரத்திற்கெல்லாம் சில கைத்தட்டல் மற்றும் வண்டியின் தகரத் தட்டுகளுக்குப் பின்னால் உச்சஸ்தாயில் பயணித்தது. நேரம் ஆக ஆக சத்தம் காதைப் பிளந்தது. அந்தப் பிய்ந்து தொங்கிய தகரத்தை முழுதாய் பிய்க்காமல் விடமாட்டார்கள் போல, சிலர் கையாலும் சிலர் கையில் இருந்ததை கொண்டும் சரமாரியாய் தட்டினார்கள். பல்லெல்லாம் கூசியது... சுவற்றில் நகத்தை வைத்து தேய்ப்பதைப் பார்த்தது மாதிரி. பேசாமல் பார்க்காமலே இருந்திருக்கலாம். பக்கத்தில் இருப்பவரைப் பார்த்தேன், இதெல்லாம் என்ன பெரிய இது என்பது மாதிரி நின்றிருந்தார், இத்தனைக்கும் காதில் பஞ்சு கூட இல்லை.
"மச்சி... கிளி சிரிச்சிருச்சுரோய்."
"இப்ப வர்றேன்." ஒருவேளை பச்சை ட்ரஸ் போட்ட பொண்ணு யாரும் முன்னாடி இருக்குமோ என்னவோ?
திரும்பவும் ஒரு சலசலப்பு என்னவோ ஏதோன்னு பார்த்தா அவன் பஸ்ஸோட பக்கவாட்டு சன்னல் கம்பியைப் பிடிச்சுத் தொங்கிகிட்டு இருக்கான். ஏதோ அவன் எலும்பும் தோலுமா இருக்குறதுனால அந்தக் கம்பி இன்னும் பஸ்ல ஒட்டிக்கிட்டு இருக்கு, இல்லேன்னா அந்தத் தம்பியையும் கம்பியையும் ரோட்டுலதான் பார்க்கனும். அவனும் விடுற மாதிரி தெரியல கம்பிய புடிச்சே முன்னாடி போறான், போகப்போறது முன்னாடியா இல்ல மேலயான்னு போய்ச் சேர்ற வரைக்கும் நிச்சயமில்லை. சக்கரத்துல சிக்குனா சங்குதான். ஆனாலும் 'ஐலேசா ... ஐலேசா...' உற்சாகத்துக்கு ஒன்னும் குறைச்சலில்லை. வண்டிய நிப்பாட்டி நாலு விடு விட்டா சரியாப் போகும்.எல்லோரும் சர்க்கஸ் பார்க்கிற மாதிரி பார்க்குறாங்களே தவிர யாரும் எதுவும் சொன்ன மாதிரி தெரியல. கண்ணாடியை தவிர வேற எதையும் கண்டுக்குறதா தெரியல டிரைவர். கண்டக்டரோ விசில் ஊதுதறதுக்கு தவிர வேற எதுக்கும் வாயத் தொறக்குறதில்லைன்னு முடிவு போல.
இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கம் போனதுக்கு சட்டசபையில மேசையைத் தட்டுற மாதிரி திரும்பவும் வண்டிய தட்டு தட்டுன்னு தட்டிட்டானுங்க. திரும்பவும் அதே கரைச்சல்... இரைச்சல். பேசாமல் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி வேற பஸ் பிடிச்சு போயிறலாம் போல.
"மாமா... மேல நிறையா இடம் ஃப்ரியா இருக்கு."
இந்த தடவை நடனம் அதுவும் தலைக்கு மேலே... நிச்சயம் நான்கைந்து பேர்களுக்கு மேலாவது மேலே இருப்பார்கள். எந்த நம்பிக்கை என்று தெரியவில்லை, அதுவும் தூறல் போட்டாலே ஒழுகும் கூரை மேல். எப்படி ஏறினார்கள் என்று தெரியவில்லை. நல்ல வேளை மாடி பஸ் இந்த ரூட்டுல விடலை. இவங்க வீட்டுலயெல்லாம் கஷ்டப்பட்டு படிக்க அனுப்புனா, இதுங்க இங்க சர்க்கஸ் நடத்துதுங்க. இதெல்லாம் இவங்க வீட்டுல இருக்கவங்க பார்க்கனும். ரோட்டில் நடந்து போகிறவர்கள் மட்டும் கொஞ்சம் திரும்பி பார்த்துவிட்டுப் போனார்கள்.
ஆனா ஏன் ஒருத்தருமே வாயைத் தொறக்கமாட்டுறாங்கன்னு தெரியல, ஒருவேளை தினமும் நடக்குற அக்கப்போருதானே இன்னைக்கு என்ன புதுசான்ன ...? இல்ல இவனுங்க கிட்ட வாயைக் குடுத்து யாரு வாங்கிக் கட்டிக்கிறதுன்னா...?
யப்பா... இந்த பஸ்க்கு மட்டும் வாய் இருந்திருச்சுன்னா ...
யாரோ சிரிச்ச மாதிரி இருந்துச்சு...
பஸ் சிரிச்சிருக்குமோ ?!
Labels: சிறுகதை