திரட்டிகள்: தமிழ்மணம் | தேன்கூடு | தமிழ்ப் பதிவுகள்

தசாவதாரம் படத்தின் முதல் காட்சியில், ஒரு பட்டாம் பூச்சி பறந்து போகிற பின்னணியில் கேயாஸ் தத்துவத்தைப் பற்றி கமல் சில வார்த்தைகள் சொல்வார். படத்தின் கதை, இந்தத் தத்துவத்தின் பின்னணியிலே பின்னப்பட்டிருக்கிறது.

சரி. அது என்ன கேயாஸ் தத்துவம்?

கேயாஸ் கட்டமைப்பி்ல் (chaos system) ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் கூட கால ஓட்டத்தில் கணிக்க முடியாத பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும். கவித்துவமாய் சொல்வதானால் 'பட்டாம் பூச்சி விளைவு' (Butterfly Effect); ஒரு பட்டாம் பூச்சியின் சிறகசைவு வளி மண்டலத்தில் ஏற்படுத்தும் சிறு மாற்றம் கூட காலப் பெருவெளியில் ஒரு சூறாவளியை ஏற்படக் காரணமாக இருக்கக்கூடும்.

உதாரணத்திற்கு ஒரு மலை உச்சியில் இருந்து ஒரு பந்து உருள்கிறது என்று என்று வைத்துக் கொள்வோம். மலை உச்சியில் பந்து எந்த இடத்தில் இருக்கின்றது என்ற சிறிய வேறுபாட்டைப் பொருத்து பந்து உருளும் பாதையும் மாறுபடும் அல்லவா?

"12B" (Original: Run lola Run) படத்தில் கதாநாயகன் ஒரு பேருந்தை தவறவிட்டதால் என்னவாக ஆகிறார் என்றும், ஒருவேளை அந்தப் பேருந்தை பிடித்திருந்தால் என்னவாக ஆகியிருப்பார் என்றும் கதைத்திருப்பார்கள். பேருந்தை தவறவிடுவதற்கும் பிடிப்பதற்குமான அந்த ஒரு நொடி அவன் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்பது மாதிரி...

ஒருவேளை மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் நிறவெறியர்களால் இரயிலில் இருந்து வெளியேற்றப்படாமல் இருந்திருந்தால்...

இதுமாதிரியான சிறிய நிகழ்வுகள் காலப் பயணத்தில் உண்டாக்கும் கணிக்க முடியாத விளைவுகள் பற்றியது.

இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்காக ...
http://en.wikipedia.org/wiki/Butterfly_effect

சரி, தசாவதாரத்திற்கு வருவோம் ...

படத்திற்கு சம்பந்தம் இல்லாததாக தோன்றும், 12ம் நூற்றாண்டில் நடந்ததாக காட்டப்படும் காட்சியில் சைவர்களுக்கும், வைணவர்களும் இடையில் நடக்கும் ' யார் பெரியவர்' என்ற மோதலில் 2ம் குலோத்துங்க சோழனால் தில்லை திருமாலின் சிலை கடலில் வீசப்படுகிறது. கடலில் வீசப்படும் அந்த சிலை (அ) கல் கடல் என்னும் கேயாஸ் கட்டமைப்பில் ஏற்படுத்திய சிறிய மாற்றத்தின் தொடர் விளைவுகளே 2004ல் சுனாமியை வரவழைத்திருப்பதாக பின்னப்பட்டிருக்கிறது.

மற்றபடி 2004ல் அமெரிக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படும் கிருமியினால் (Bioweapons) மடியப் போகும் பல கோடி மக்களைக் காப்பாற்ற வேண்டி சுனாமியை வரவழைப்பதற்காகவே 12ம் நூற்றாண்டில் கடலுக்குள் திருமால் சிலை சென்றதாக நினைப்பவர்கள் 'காரணமும் விளைவும்' (Law of Cause and Effect) தத்துவத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

இது என்ன இன்னொரு தத்துவமா என்று கேட்பவர்களுக்காக ... சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் உங்கள் பூனை மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டால், நீங்கள் புவியீர்ப்பு விசையை சபிப்பீர்களா? ...Explains how things happen, but not why.

10 Comments:

  1. கானா பிரபா said...
    இன்பா,
    மிகவும் எளியமுறையில் அழகா விளக்கியிருக்கீங்க. நன்றி
    மங்களூர் சிவா said...
    :)
    G.Ragavan said...
    அருமையான விமர்சனம். படத்தில் கமல் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றீர்கள். அருமை.
    மங்களூர் சிவா said...
    அந்நியனில் சுஜாதாவுக்குப் பிறகு இப்போ கமல் "கயாஸ் தியரி"யைக் கையில் எடுத்திருக்காரு. ஆனா, என்ன சொல்ல வர்றாருன்னு தான் புரியல. ஒரு வேள, ராமானுஜதாசனை பெருமாள் சிலையோட கடலில் தள்ளியபோது, அந்தச் சிலை தரையில் மோதியதால் ஏற்பட்ட தாக்கம் தான் 2004ல் கடலில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கத்துக்கு காரணமாக இருந்து சுனாமியை வரவழைத்ததுன்னு சொல்றாரா? இல்லாட்டி ராமானுஜதாசனின் கடைசி மூச்சுக் காற்று, அவருடைய மூக்கிலிருந்து ஒரு குமிழியாகப் புறப்பட்டு மேலே கிளம்புதே, அது தான் 2004 ஆழிப் பேரலைக்கு காரணமா இருந்துச்சா?

    கயாஸ் தியரி பத்தி தெரிஞ்ச நண்பர்கள் கொஞ்சம் விளக்கலாமே.
    Sridhar V said...
    இன்பா,

    நன்றி. நானும் இதே கருத்தை சில பதிவுகளில் பின்னூட்டமாக போட்டிருந்தேன். இதுவே படத்தின் மைய முடிச்சு. ஏனோ இது படத்தில் தெளிவாக சொல்லப்படவில்லை என்று தோன்றுகிறது.

    மங்களூர் சிவா,

    பதிவை இன்னொரு முறைப் படிச்சீங்கன்னாலே உங்க கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

    tectonic plates-களில் ஏற்படும் உரசல்தான் சுனாமிக்கு காரணம். ஒரு கல் கொடுத்து கொண்டிருக்கு அழுத்தம் பல நூறு ஆண்டுகளில் அதிகரித்து பின் ஏறப்டும் தாக்கத்தினால் கூட சுனாமி வெளிப்படலாம்.

    இறுதிக் காட்சியில் வரும் ஒரு வசனம் 'எல்லாத்துக்கும் சாமிதான் காரணம்னா, இப்படி நடக்கும்னு தெரிஞ்சு பல நூறாண்டுகளுக்கு முன்னாடி கடலுக்கடியில் கல்லை போட்டு வச்சிருக்கார்னா சொல்றீங்க?'

    இதான் மைய முடிச்சு.
    Sridhar V said...
    அந்நியனுக்கும் கேயாஸ் தியரிக்கும் எந்த அளவுக்கும் சம்பந்தம் கிடையாது என்றுதான் தோன்றுகிறது.
    ரங்குடு said...
    கேயாஸ் தியரியை விடுங்க. என்னமோ இப்பொதான் உலகத்திலேயே
    முதல் தடவையாக சுனாமி (ஜப்பானிய மொழியில் தான் ஆழிப்பேரலைகளுக்கு
    இந்த பெயர்) வந்தது போலவும் கதை பண்ணியிருக்கிறார்கள்.
    ஜப்பானிலோ, மற்ற உலகத்தின் எந்த பகுதியிலோ இதுவரை வந்த சுனாமிகளுக்கு
    எந்தப் பெருமாள் காரணம்?

    இதுவரை வந்துள்ள சுனாமிகள்:

    http://www.factmonster.com/ipka/A0930274.html

    சினிமா என்பது பிழைக்கத்தெரிந்தவர்களின் ஆயுதம். கமல் அதில் கை தேர்ந்தவர்.
    எதைக் காட்டினால் விற்கும் என்று தெரிந்த வியாபாரி.

    படத்தைப் பார்த்து விட்டுப் போவீங்களா?
    Sridhar V said...
    //இப்பொதான் உலகத்திலேயே
    முதல் தடவையாக சுனாமி (ஜப்பானிய மொழியில் தான் ஆழிப்பேரலைகளுக்கு
    இந்த பெயர்) வந்தது போலவும் கதை பண்ணியிருக்கிறார்கள்.//

    ரங்குடு,

    'முதல்முறையா' சுனாமின்னு எங்கயும் சொல்லியிருப்பது போல தெரியவில்லையே. ஜப்பானியர் ஒருவர்தானே இறுதியில் சுனாமியை அடையாளம் கண்டு படகில் மற்றவர்களை படகில் ஏற்றி காப்பாற்றுகிறார்.

    படம் புரியலைன்னா விடுங்க. 'நமக்கு' எல்லாம் புரிஞ்ச மாதிரி நிறைய படங்கள் வந்திட்டுதானே இருக்குது :-). எஞ்சாய்.
    இன்பா (Inbaa) said...
    வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி கானா பிரபா, மங்களூர் சிவா, ஜி. ரா, ரங்குடு.

    Sridar Narayanan உங்கள் விளக்கங்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன.
    Athisha said...
    கேயாஸ் பத்தி யொம்ப இலகுவா விளக்கிருக்கீங்க மிக்க நன்றி

    என் மர மண்டைக்கே புரிஞ்சிருச்சுங்கோ.......

    ;-)

Post a Comment