திரட்டிகள்: தமிழ்மணம் | தேன்கூடு | தமிழ்ப் பதிவுகள்

Chak de India - ஒரு பார்வை

இப்பெல்லாம் ...
இப்பெல்லாம்னா குறிப்பா போன உலக கோப்பைப் போட்டிக்குப் பிறகு யார்கிட்டேயும் கிரிக்கெட் பத்தி பெரிசா பேசிக்கிறது இல்ல. "தோத்தா காசு வாங்கிட்டாங்க ... இல்ல தப்பித் தவறி ஜெயிச்சா எதிரணி காசு வாங்கிட்டாங்களோ என்னவோ..." ன்னு பெரும்பாலும் ஒரே மாதிரி தான் சந்தேகப்படுறாங்க.

அது மாதிரியான் ஒரு சந்தேகத்தின் கதை, சக்தே இந்தியா ...



இந்திய ஹாக்கி அணிக் கேப்டன் 'கபீர் கான்' (ஷாருக் கான்) பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒரு இறுதிப் போட்டியில், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் கோல் அடிக்க தவறுகிறார். ஹீரோ துரோகியாக்கப்படுகிறார். அவர் வீடு தாக்கப்படுகிறது. ஊரை விட்டு வெளியேறுகிறார். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளராகிறார், இழந்தப் பெருமையை மீட்டெடுக்கிறாரா என்பது தான் கதை.


பொதுவாக சினிமாக்களில், அடிதடி காட்சிகளுக்கு மட்டுமே பயன்படும் ஒரு வஸ்துவான ஹாக்கி மட்டையை கொண்டு விளையாடப்படும் 'ஹாக்கி' எனும் ஒரு விளையாட்டை (எப்ப கடைசியா ஜெயிச்சம்னு தெரியல ...) அதுவும் பெண்கள் ஹாக்கியை கதைக் களமாய் எடுத்துக் கொண்டதற்கே ஒரு பெரிய பாராட்டு!

பதினாறு ஹீரோயின்கள், சிலர் அழகாயிருக்கிறார்கள்... சிலர் அழகாகவும் ஆடுகிறார்கள் (ஹாக்கி தான், டூயட் எல்லாம் படத்தில் கிடையாது). பார்த்து பார்த்து சேர்த்த கலவை. 'கலக்கி' யிருக்கிறார்கள்.

தெருக் கிரிக்கெட் மாதிரி, 'கோமல்'-ன் அறிமுகத்தில் காட்டப்படும் தெருக் ஹாக்கி, ஒரு ஹைக்கூ!

முதல் பாதியில் நிகழும் ஆண்கள் அணிக்கெதிரான ஆட்டமாகட்டும் அல்லது இரண்டாம் பாதியில் நடக்கும் உலகக் கோப்பைப் போட்டியாகட்டும் நிஜ போட்டியை பார்ப்பது மாதிரியான பிரமையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். பிற நாட்டு அணி வீரர்கள், அவர்கள் உடைகள், மைதானம், அவர்கள் ஆட்டம் என (குறிப்பாய் அந்த ஆஸ்திரேலிய அணி ...) சினிமாத்தனம் இல்லாமல் இருக்க ரெம்பவே மெனக்கெட்டு இருக்கிறார்கள்.

படத்தின் மிகப் பெரிய பலம், ஷாருக்! திசைக்கொருவராய் சிதறிக் கிடப்பவர்களை அணி திரட்டுவதில் தொடங்கி, ஹாக்கி சம்மேளனத்தை சரிக்கட்டுவது, சாப்பாட்டு மேசையில் யுக்தி தீட்டுவது, என படத்தின் கடைசி நிமிடம் வரை கனவுகளை சுமந்தபடி மிக இயல்பாக வலம் வந்திருக்கிறார், (ஆட்ட) நாயகன்.

சப் டைட்டில் உதவியுடன் இரசித்த ஒரு வசனம்,
தான் வாங்கிய வெள்ளிப் பதக்கத்தை உரசிய படியே ஒரு வியூகத்தை யோசித்துக் கொண்டிருக்கையில் ...
" (இத வச்சு) என்ன சார் பண்றீங்க?"
" இத தங்கமாக்க முயற்சி பண்றேன்".

படத்தில் ஒரு சின்ன உறுத்தல், கிடைக்கும் போதெல்லாம் ஆங்காங்கே கிரிக்கெட்டை வாரி இருக்கிறார்கள், ஒரு விசயத்தின் சிறப்பை சொல்ல மற்ற ஒன்றை நொட்டை சொல்லித்தான் சொல்ல வேண்டுமா?

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வில்லாமல் விறுவிறுப்பாகவே நகர்த்தி சென்றிருக்கிறார்கள், படத்தையும் இன்னொரு முறையும், இனிமேல் ஹாக்கி விளையாட்டையும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

இப்போதைக்கு ட்ரைலர் ...


1 Comment:

  1. வவ்வால் said...
    ஷாலின் சாக்கர் என்ற சீன சண்டை படம்(ஆனா காமெடி)தமிழில் மிரட்டல் அடி -2 னு இதே போல இருக்கும்.

    கோல் அடிக்காமல் விட்டதால் காசு வாங்கிட்டான்னு ஒருவரை அடித்து காலை உடைப்பார்கள் , பின்னாளில் தெருவில் சண்டைப்போட்டு கொண்டு அலையும் குங்பூ பசங்களை தேத்தி, புட்பால் ஆடவைத்து கோப்பை வாங்குவார்!

Post a Comment