திரட்டிகள்: தமிழ்மணம் | தேன்கூடு | தமிழ்ப் பதிவுகள்

கணக்கு - சிறுகதை

"ஒரு முட்டை தோசை போடுப்பா..."

வெறும் தட்டையே கொஞ்சம் நேரம் முறைத்து விட்டு அப்புறம் என்னை முறைத்தார் அந்த போலிஸ்காரர். அட ... அவர் முறைச்சார்ன்னா அதுக்காக
நம்ம முழி திருட்டு முழின்னு நினைச்சுக்காதீங்க. அவர் பார்வையே அந்த மாதிரி தான் போல. நானும் இந்த ரெண்டு நாளா பார்த்துகிட்டுதானே
இருக்கேன்.

"தம்பி எந்த பக்கம்?"

"மதுரைப் பக்கம்ங்க."

"பக்கம்ன்னா?"

"திருவேடகம்னு மதுரையிலிருந்து ஒரு இருபது கிலோ மீட்டர் ..."

"இங்க என்ன பண்ணுறீங்க?"

"ஏர்டெல்ல மார்க்கெட்டிங் எக்சிகியூட்டீவ் சார்."

ஒரு மாதிரியாய் பார்த்தார். இதுவும் முறைக்கிற மாதிரி தான் தோனுது. ஒருவேளை டையை கழட்டாம இருந்தா நம்பியிருப்பார் போல. அதுக்காக
பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு மாதிரி இராத்திரி சாப்பிடும் போதும் கூட கழட்டாம இருக்க முடியுமா என்ன?

மார்க்கெட்டிங் எக்சிகியூட்டீவ்ன்னு இல்லீங்க சேல்ஸ் கோ-ஆர்டினேட்டர், சேல்ஸ் ரெப்-ன்னு எப்படி சொன்னாலும் இவர்ன்னு இல்ல எல்லாரும்
இப்படிதாங்க பார்க்குறாங்க. அப்புறம் எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி அடுத்த கேள்வி கேட்பாங்க...

"என்ன படிச்சிருக்கீங்கன்னு ?"

கெமிக்கல் இஞ்சினியரிங்-ன்னு சொன்னா திரும்பவும் ஒரு பார்வை. இந்தப் பார்வைக்குத்தான் எனக்கு இன்னைக்கு வரைக்கும் அர்த்தம் தெரியல.
இளக்காரமா? இல்ல பச்சாதாபமா? இல்ல எங்களுக்கேவான்னு நக்கலான்னு சத்தியமா புரியல.

எல்லாரும் எடுத்தது போக நாம எடுத்த மார்க்குக்கு கெமிக்கல் தாங்க கிடச்சது. கிடைச்சது கெமிக்கல்-னாலும் நமக்கும் சாப்டுவேருக்கும் தாங்க ஒரு கெமிஸ்ட்ரி (அதுக்கு என்ன பண்றது கெமிக்கல் லேபுக்கு போயிட்டு வந்தாலே முடியெல்லாம் கொட்டுது). யுனிக்ஸ், சி, சி++, ஜாவா, கழுத குதிரன்னு கண்டத கடியததையும் படிக்க வேண்டியதாகிப் போச்சு. எறக்குறைய ரெண்டு பொண்டாட்டிகாரன் கதை தான். காலேஜ் முடிச்சு ஒரு வருசம் ஆகிப்போச்சு, நானும் எவனாவது வேலைக்கு கூப்பிடுவான்னு பார்த்தேன். ஒருத்தனும் கண்டுக்குற மாதிரி தெரியல. வீட்டுல வேற ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க (இது எந்த மாதிரின்னு எல்லோருக்கும் தெரியும்). இது வேலைக்கு ஆகாதுன்னு பொட்டியத் தூக்கிட்டு கிளம்பியாச்சு. வேறெங்க கழுத கெட்டா குட்டிசுவர்தான்.

ஒருமணி நேரம் தாமதமாய் எழும்பூர் வந்து சேர்ந்தது இரயில். வண்டி வந்து அரை மணி நேரம் கழித்து தான் வந்தான் சரவணன். நானும் சரவணனும்
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே நண்பர்கள். வடபழனி நூறு அடி ரோட்டிற்க்குப் பின்னால் தான் வீடு. இரண்டாவது மாடி, கதவு பூட்டும்
ப(வ)ழக்கமெல்லாம் இல்லை போல, உள் நுழைந்ததும் நாலு பேர் வரிசையாய் படுத்திருந்தார்கள். ஒருவருக்கும் மற்றொருவருக்கும் போதிய
இடைவெளியெல்லாம் இல்லை. சமையலறை பகுதி பெட்டி வைப்பதற்காக. குளிப்பதற்கும் 'அதற்கும்' சேர்த்து ஒரு அறையை தவிர வேறு அறை எதும்
இல்லை. சரவணனைப் பார்த்தேன்.

"அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்."

அது சரி, நாம என்ன வரவான்னு கேட்டுட்டா வந்தோம், நாளைக்கு காலையில ஸ்டேசன் வந்துருன்னு சொல்லிட்டுல்ல வந்தோம்.

"நாம வேனா மேல படுத்துக்கலாம்" என்றான்.

வானம் பார்த்த படுக்கை. பாதி கட்டப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது மேல் தளம். பாவம் வீட்டுக்காரருக்கு என்னப் பிரச்சனையோ?

"மழை வந்தா என்னா பண்ணுறது?"

"அத வரும் போது பார்த்துக்கலாம்."

வீட்டு வாடகை, சாப்பாடு, பஸ் அப்புறம் கைச்செலவு அப்படி இப்படின்னு பார்த்தா மாசத்திற்க்கு எப்படியும் ஒரு ரெண்டாயிரமாவது வேண்டும். இப்ப
இருக்குறத வச்சு ஒருமாசம் வேணா சமாளிக்கலாம். வேலை கிடைக்கலைன்னா அடுத்த மாசம் ஊருக்குதான் போகனும். டி.வி.ஸ் 50 இருக்குன்னு ஒரு பொய் சொல்லிசைதாப்பேட்டைல ஒரு ஏர்டெல் டீலர் கிட்ட வேலை, மாசத்திற்க்கு இவ்வளவுன்னு ப்ரீபெய்ட் கனெக்சன் புடிக்கனும். என்னது ... புடிக்கலைன்னாவா? போன வரியைத் திரும்ப படிங்க. வேலைக்குப் பேர் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டீவ், சேல்ஸ் கோ-ஆர்டினேட்டர், சேல்ஸ் ரெப்-ன்னுன்னு இடத்துக்கு தகுந்த மாதிரி நானே போட்டுக்குறது தான்.

"தம்பி ... என்ன யோசிக்கிற? என்ன படிச்சிருக்கேன்னு கேட்டேன்." அடடா இவர் இன்னும் விசாரனையை முடிக்கல போல.

கெமிக்கல் இஞ்சினியரிங்-ன்னு நான் பழைய பல்லவியை முடிக்குறதுக்குள்ள சண்முகம் அண்ணன் முட்டை தோசையைப் போட்டு விசாரனையை ஒத்தி வைத்தார். இனி சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் பேச மாட்டார்.

சண்முகம் அண்ணனின் வீடு எங்கள் வீட்டிற்க்கு பக்கத்து சந்தில் தான். எங்க மெஸ்-ம் அதுதான். எங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் அண்ணனிடம் தான் கணக்கு, அந்த மாதத்தின் கடைசியில் பணம் குடுத்தால் போதும். மூன்று வேளைக்கும் சேர்த்து ஒரு மாதத்திற்கு ஆயிரத்திற்கு சற்று குறைவு.
வருமானத்திற்கேற்ற தரமான சாப்பாடு. காலையில் தோசை, சப்பாத்தி, மதியம் தக்காளி, எலுமிச்சை சாதம் எப்போதாவது சாம்பார் ரசத்துடன் சாதம். வேலைக்குப் போகிறவர்களுக்கு தனியே கட்டி வைத்துவிடுவார். இரவு நூறு அடி சாலையில் தள்ளு வண்டியில் கடை போடுவார். இரவுச் சாப்பாடு
அங்கே கையேந்தி பவனில் தான். அண்ணனுக்கு முக்கிய வருமானமே அதுதான். ஆறு ஆறரை மணிக்கெல்லாம் அடுப்பை பற்ற வைத்து விடுவார். ஏழு எட்டு மணிக்கு சூடு பிடிக்கும் வியாபாரம் பத்து பதினொரு மணி வரை கூடச் செல்லும். அப்படி ஒரு கைப்பக்குவம்.

அண்ணனுக்கு சொந்த ஊர் அருப்புக் கோட்டை, எங்க ஊர் பக்கம் தான். சென்னைக்கு வந்து ஒரு பத்து மாசம் ஆயிருக்கும். ஏதோ விவசாயத்துல
நொடிச்சுப் போயி கடன் தொல்லை தாங்க முடியாம சென்னைக்கு ஓடி வந்தாராம். இப்பக் கூட பொண்டாட்டி புள்ளைங்க மாமனார் வீட்டுலதான்
இருக்காங்களாம். மாசம் மாசம் தவறாம பணம் அனுப்பிகிட்டு இருக்காரு கொஞ்சம் நிலைமை சரியாச்சுன்னாத்தான் ஊரப் பக்கம் தலை வைக்க
முடியும்.

"எத்தனை பேருக்கு சோறு போடுது இந்த ஊரு, நம்மள மட்டும் விலக்கிரும்மா என்ன?" என்பார்.

அண்ணன் தான் என்னோட முதல் நம்பிக்கை. ஏதோ பேருக்கு அண்ணன் அண்ணன்-ன்னு சொல்லலை. காலையில சாப்பிட போக கொஞ்சம் நேரமான கூட சாப்பாட வீட்டுக்கே கொண்டு வந்துருவாரு. நிஜமாவே ரெம்ப பாசமானவருங்க.

ஒரு நாள் இரவு இப்படித்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் ... திடு திடு வென சத்தம். போலிஸ் தான். அண்ணன் லைட்டை அனைத்து வண்டியை ஒரம் கட்டப் பார்த்தார்.

"எடுறா வண்டிய ... இங்க யாரைக் கேட்டுடா கடையப் போடுறீங்க?"

திடும் திடும் என லத்திச் சத்தம் சில அடிகள் தரையிலும் சில வண்டியிலும். சாப்பிட்டுக் கொண்டிருந்த பலர் தெறித்து ஒடினார்கள். கொஞ்ச நேரம் தான். கொஞ்ச நேரத்தில் இந்த அளப்பரை எல்லாம் ஓய்ந்து தணிந்தது. அண்ணன் தரையை துளாவி எதையோ தேடிக் கொண்டிருந்தார். அடுப்பு அனைந்து போயிருந்தது. அண்ணன் மட்டும் சூடா கத்திக் கொண்டிருந்தார்.

"கோ... டெய்லி இருபது முப்பதுன்னு வாங்கிட்டு போறான்ல ... அப்புறம் என்ன கொள்ளை வந்துச்சாம் ... வெளங்காதவன் வாசரை எடுத்துட்டு
போறான்."

இனி இன்னைக்கு வியாபாரம் அவ்வளவுதான். இந்த மண்ணெண்னை ஸ்டவுக்கு வாசர் மட்டும் வாங்குறது இனி இயலாத காரியம் புதுசா அடுப்புதான் வாங்கனும். அவர்கள் உதைத்துச் சென்றதில், தண்ணீர்க் குடம் உடைந்து இழித்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் நான் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தேன். அண்ணன் என்னைப் பார்த்தார்.

"ஏண்டா ... இவ்வளவு கலவரம் நடந்துகிட்டு இருக்கும் போது கூட நீ சாப்பிடுறதை நிறுத்தல பார்" என்பது போல இருந்தது. தட்டை கீழே வைக்கப்
போனேன்.

"தம்பி தட்டை வச்சுறாதீங்க ... பக்கத்து வீட்டுல ஸ்டவ் கேட்டு கீட்டு வாங்கிட்டு வாரேன். கொஞ்சம் பொறுத்துகுங்க"-ன்னு போயிட்டு ஸ்டவோட
வந்தார்.

அதுக்கப்புறம் இப்பத்தான் கொஞ்ச நாளா போலிஸை அண்ணன் கடைப் பக்கம் பார்க்கிறேன், அதுவும் அளப்பறை ஆர்ப்பாட்டம் இல்லாம. இவரு ரெண்டு மூணு நாளா இங்க தான் சாப்பிடுறார். தண்ணியில்லாத காட்டுக்கு மாத்துறேன்னு இங்க மாத்திட்டாங்களா? அண்ணன் கிட்ட கேட்டாதான் கதை என்னான்னு தெரியும்.

"எண்ணன்னே ... புதுக் கணக்கா?"

"அட நீ வேற ... அது காந்தி கணக்கு."