திரட்டிகள்: தமிழ்மணம் | தேன்கூடு | தமிழ்ப் பதிவுகள்

அல்லக்கை - சிறுகதை

மறுபடியும் அலறியது அழைப்பு மணி. காலையிலிருந்து ஏறக்குறைய இது பதினைந்தாவது முறை. சிட்டுக்குருவி சப்தம், குயிலோசை, செல்லமாய்
அழைக்கும் மழலை என விதமாய் அழைக்கும் அழைப்பு மணி என்றால் கூடப் பரவாயில்லை. இது அலறல். பழைய சைக்கிள் மணியை காதுக்குப்
பக்கத்தில் வைத்து விடாமல் அடிக்கின்ற மாதிரி. சப்தம் கேட்டவுடனே கதவுக்கு ஓடிவிட வேண்டும், இல்லையெனில் திரும்பவும் கேட்க்க நேரிடும்.
இங்கே யாருக்கும் காத்திருக்கும் அளவுக்கு நேரமில்லை. சில சமயம் பழகிய முகங்களும், சில சமயம் புதிய முகங்களும் ... எல்லோருக்குமே
அழைப்பதற்க்கென்று ஏதோ ஒரு உறவு வாய்த்திருக்கிறது, அம்மா, அக்கா, அண்ணன், அய்யா. ஐயோ, காலையிலிருந்து நாலு ஓட்டுக்கு நாற்பது ஓட்டுச்
சீட்டுக்கள் எல்லோருக்கும் ஒரே கோரிக்கைகள்... வேறு வேறு வார்த்தைகளில், வேறு வேறு சின்னங்களில். இந்த முறை பழகிய முகம். பழக்கம் என்றால் நான் டவுசர் போட்ட காலத்திலிருந்தே பழக்கம். வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையுமாய் நின்றிருந்தான் இராமசாமி. அதே கரை
வேட்டிதான். அதே என்றால் கடைசியாய் நாங்கள் சென்னையில் சந்தித்த போது அணிந்திருந்த அதே கரை வேட்டி தான். இப்போது மாற்றியிருப்பான்
அல்லது விட்டொழித்திருப்பான் என்று நினைத்தேன். ம் .. ஹீம்.

நானும் இராமசாமியும் ஒரே தெருவில்தான் இருந்தோம். தெருவின் கடைசிக்கு முந்தைய வீடு எங்கள் வீடு, அதற்க்கு அடுத்த வீடு இராமசாமி வீடு. எட்டாம் வகுப்பு வரையிலும் நானும் இராமசாமியும் வகுப்புத் தோழர்கள், அப்புறமாய் சில வருடங்கள் பள்ளித் தோழர்கள். முதலில் சின்ன
இடைவெளிதான், அப்புறம் நான் தொழிற்க்கல்விக்கும், அவன் தொழிலுக்கும் போனதிலிருந்து ஒர் ஊர்க்காரர்களாய் மட்டும் ஆகிப்போனோம். எங்கள்
தெருவும் சந்தைப் பேட்டை தெருவும் சந்திக்கும் மூலையில் தான் இராமசாமியின் கடை. 'இராமசாமி பலசரக்குக் கடை' என்பதை விட 'மூலைக்கடை' என்பது தான் பிரபலம். மூலைக்கடைக்கு இராமசாமி மூன்றாம் தலைமுறை முதலாளி.

'தியாகு எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ்' - மூலைக்கடைக்கு அந்தப் பக்கத்திலிருந்து இரண்டாவது கடை. தீர்க்கமுடியாத பழுதுடன் சில பல பழைய வானொலிகளும், பிரித்துப் போட்ட ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் மட்டுமே இருக்கின்றது காலம் காலமாய், கடையின் பெயரை நியாப்படுத்த
வேண்டாமா? ஆனால் பலசரக்கு கடைக்கு நிகராக எப்போதும் ஒரு கூட்டம், கரை வேட்டிக் கூட்டம். ஆகாஷவானியின் செய்தியறிக்கையை தவிர்த்து
விட்டுப் பார்த்தால் எப்போதும் அரசியல் செய்திகள் தான் கறை புரண்டு ஓடும். தியாகராஜன் என்ற தியாகு 'அண்ணன்' அந்தக் கட்சியின் நகரச்
செயலாளர், இராமசாமிக்கு அண்ணன் முறை. பெரியண்ணன் போல, குறைந்தபட்சம் பதினைந்து இருபது வயது வித்தியாசமிருக்கும். இங்கு
இல்லையென்றால் மட்டுமே ... ஒருவேளை இராமசாமியை மூலைக்கடையில் பார்க்கக் கூடும்.

அம்மா ஒரு நாள் சிவன் கோவிலுக்கு வெளியே பார்த்தாய் சொன்னார்கள். அவன் பிரதோஷத்திற்க்கு போகின்ற ஆள் கிடையாது.

"அந்த கட்சிக்காரப் பயலுகளோட சேர்ந்து சிகரெட் பிடிச்சுக்கிட்டு இருந்தான் போல, என்னப் பார்த்ததும் சிகரெட்ட தூக்கிப் போட்டுட்டான். வெள்ளையும்
சொள்ளையுமா பெரிய மனுஷன் மாதிரிதான் இருக்கான். தண்ணி கிண்ணியெல்லாம் அடிப்பான் போல கண்ணமெல்லாம் உப்பிப் போய் ..."

"..."

"நீயும் அவன் கூட சேர்ந்து கெட்டு கிட்டு போகாத ..."

வயதுக்கு மீறிய இந்த சிநேகிதம் தான் காரணமா என்று சரியாகத் தெரியவில்லை. இராமசாமிக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த வயதுக்கு மீறிய பெரிய மனுஷத்தனம் மிக இயல்பாய் பொருந்திப் போய்கிறது. நானெல்லாம் காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கின்ற போதே தினத்தந்தி படித்து தெளிவாய் அரசியல் பேசுவான். எனக்கெல்லாம் முதல் ஓட்டுப் போடவே முப்பது வயதுக்கு மேலாகிவிட்டது. பதினெட்டு வயதுக்கு முன்னாலேயே பதினெட்டு ஓட்டு போட்டிருப்பான். "மாப்ள... ஒட்டு போடுறதுக்கு பூத்து பக்கம் கிக்கம் போயிறாத ... உன் ஓட்டெல்லாம் போட்டாச்சு..." ன்னு அசால்டா சொல்லிட்டு போவான். பேசிக்கொண்டிருக்கும் இடைவெளியில் சைக்கிளில் போகும் எவரோ ஒருவரை "எண்ணே ... பாத்தீங்களா, பார்த்துட்டு பாக்காம போறீங்க" என்பான். ஊரில் முக்கால்வாசிப் பேரை அவனுக்கும், பாதிப் பேருக்கு அவனையும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

எம்.எல்.ஏ வைப் பார்க்க, செக்ரட்ரியேட்ல ஒரு சின்ன வேலை , பொதுக்கூட்டம் ... என்று எப்போது சென்னை வந்தாலும் பழைய எம்.எல்.ஏ
ஹாஸ்டலில் தான் தங்குவான், கட்சி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி. இந்த முறை அங்கில்லை. எழும்பூர் இரயில் நிலையத்தின் பக்கத்தில் தான் அந்த தெரு. ஏறக்குறைய சந்து தான், தண்டவாளத்தின் அகலத்தை தாண்டிவிட வாய்ப்பில்லை. அந்த சின்ன சந்தில் லாட்ஜை தேடிக் கண்டுபிடிப்பதில் பெரிய சிரமமில்லை. உள்நுழைந்ததும் இடது புறத்தில் மூன்றாவது அறை என்று சொல்லியிருந்தான். அறைக் கதவு
தாழிடப்படவில்லை, என்னை எதிர்பார்த்து காத்திருப்பான் போல.

"வாடா ... உன்னத்தான் எதிர்பார்த்துட்டிருந்தேன். நல்லாயிருக்கேல்ல?

அப்புறம்... எப்படி போய்கிட்டு இருக்கு?"

"நல்லா இருக்கேன். வீட்டுக்கு வந்திருக்கலாம்ல ... ஏண்டா இங்க வந்து இருக்க ?"

"நம்ம வீட்டுக்கு வர்ரதப் பத்தி என்ன ... நம்ம வீட்டுக்கு வராமலா... நான் மட்டும்னா பரவாயில்ல ... நானும் இன்னொரு கட்சிக்காரரும் வந்தோம்.
அதான்..."

ஒருத்தர் கட்டிலிலும், ஒருவர் தரையிலும் வேண்டுமானால் படுத்துக் கொள்ளலாம். அவ்வளவு தான் இடம். அறையின் மூலையில் ஒரு சின்ன
மின்விசிறி கொஞ்சம் பெரிய சப்தத்துடன். மதிய வெயில் இன்னும் அறைக்குள் அலைந்து கொண்டிருந்தது. கதவை இன்னும் கொஞ்சம் திறந்து
வைத்தால் தேவலாம் போலிருந்தது.

"வீட்டுல எல்லாம் எப்படி இருக்காங்க, பொண்ணு ஸ்கூலுக்கு போய்கிட்டு இருக்காளா?"

"எல்லாரும் நல்லாயிருக்காங்க"

"வியாபாரமெல்லாம் எப்படி போய்க்கிட்டுருக்கு? கடைல புதுசா வேலையெல்லாம் பார்த்திருக்க போல, போன தடவை ஊருக்கு வந்த போது பார்த்தேன். நல்லா மார்டனா இருக்கு."

"கடைய இப்ப நாம நடத்துறதில்ல ... மூணு வருசத்துக்குன்னு நம்ம ஜெனகனுக்கு எழுதி கொடுத்திருக்கேன்."

"ஏதாவது பிரச்சனையா?"

"எல்லாம் கடன் பிரச்சனை தான். வியாபரத்துல கொஞ்சம் நட்டமா போயிருச்சு, நல்லா போய்கிட்டு இருந்த கடை தான். ஒழுங்கா உட்க்காந்து
வியாபாரத்த பாத்திருந்தா இப்படி ஆயிருக்குமான்னு தெரியல. நம்ம தான் பாதி நாள் கட்சி கட்சின்னு சுத்துரோமே அப்புறம் எப்படி? கடை பசங்களும்
நம்பிக்கையான பசங்களாத் தான் இருந்தாங்க, என்னமோ தெரியல கையாடல் பண்ணிட்டாங்க. அவங்கள சொல்லி என்ன பண்றது, நமக்குள்ள வேணும். அதுல ஒருத்தன் இப்ப தனியா கடை போட்டிருக்கான். நல்லா இருந்தா சரி தான். நம்ம ஊர்ல மளிகை கடைல நட்டப்பட்டது நான் ஒருத்தனாதான் இருக்கும்." விரக்தியாய் சிரித்தான்.

"முதல்ல இழுத்து புடிச்சிரலாம்ன்னு தான் நினைச்சேன், அப்புறம் வட்டிக்கு மேல வட்டின்னு எல்லாம் கை மீறிப் போயிருச்சு."

"காலம் காலமா நடந்துகிட்டு இருக்கிற கடைய சட்டுனு மூடவும் முடியல ... பேரு கெட்டு போயிரும்ல ... பேரக் கீர மாத்தாம நான் எடுத்து
நடத்துறேன்னு ஜெனகன் சொன்னான். மூணு வருசத்துக்கு கைமாத்தி விட்டுருக்கு. வெளிய யாருக்கும் தெரியாது."

"அப்புறம் ஏண்டா கட்சி கட்சின்னு கட்சிய கட்டிகிட்டு இன்னமும் இங்க சுத்திக்கிட்டு இருக்க?"

"கட்சியில இருக்குறதுனாலத் தான் வட்டி குடுக்க கொஞ்சம் முன்னப் பின்ன ஆனக்கூட பெருசா ஒன்னும் சொல்றதில்லை. இதுவே வேற ஒரு ஆளா
இருந்தா இன்னயேரம் கழுத்துல துண்டப் போட்டுருப்பாங்க."

"ம் ..."

"இந்த வருசம் நம்ம ஊரு பஞ்சாயத்து போர்டு எலக்சன்ல தலைவருக்கு நிக்கலாம்னு இருக்கேன். நம்ம ஊர் அமைச்சர் தான் தேர்தல் பொருப்பாளர்,
அதான் அவரை பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன். போன ரெண்டு எலக்சனுக்கும் நான் தானே அவருக்கு முன்னாடி நின்னு தேர்தல் வேலை பார்த்தது. இத்தனை வருசம் கட்சியில இருந்திருக்கோம் இதுவரைக்கும் ஒரு வார்டு கவுன்சிலர் போஸ்ட்டுக்காவது சீட்டு கேட்டிருப்பேனா? பத்து பனிரண்டு வருசமா எதிர்க்கட்சியா இருந்தப்பக்கூட, நம்ம ஊர்ல வேற எந்தக் கட்சியாவது ஜெயிச்சிருக்க விட்டிருக்கமா. போன தடவை எம்.பி எலக்சன்ல
தோத்தப்பக்கூட நம்ம ஊர்ல பதினைஞ்சாயிரம் வோட்டு லீடுங் தான்."

"இது என்னடா இன்டர்வியூ போற மாதிரி பைல் ..."

முன்னாள் அமைச்சர்களின் முன்னாலும் பின்னாலும் நின்ற படி சில, கைத்தறி ஆடைகளை பொன்னாடையாக பெற்றுக் கொள்வது மாதிரி சில,
ஆளுயர மாலையில் மறைந்து போன தலைவரின் பக்கத்தில் கொஞ்சமாய் எட்டிப் பார்த்தபடி, போராட்டங்களுக்கு தலைவரின் சார்பில் அறை கூவலிட்டு வைக்கப்பட்ட பிரம்மாண்ட தட்டி போஸ்டர்கள் சில என அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு புகைப்படத் தொகுப்பு. நாற்ப்பத்தி நான்கு முறை
கட்சிக்காக சிறை சென்றதில், முப்பத்து சொச்சதிற்கான ஆதாரங்கள். தலைமை தாங்க, சிறப்புறை, நன்றியுறை ஆற்ற அவனை அழைத்த சில
அழைப்பிதழ்கள். கடைசியாய் சில பரிந்துரைக் கடிதங்கள் என அரசியல் வாழ்க்கையை நன்றாகத் தான் தொகுத்திருந்தான்.

"என்ன ரெம்ப வெக்கையாயிருக்கா... அப்படியே வெளிய காத்தாட போய் 'டீ' சாப்பிட்டு கிட்டே வேணா பேசலாம்."

"இல்ல வேணாம்டா ..."

"மாஸ்டர் ஒரு 'டீ' ஒரு 'பால்'. நீ இன்னும் பால் தானே? நீ மட்டும் தானா இல்ல வீட்டுல யாருமே காபி, டீ சாப்பிட மாட்டாங்களா? "

"நான் மட்டும் தான். அவங்க எல்லாம் சாப்பிட்டுக்குவாங்க."

"நீ மெட்ராஸ் வந்த 'விசயம்' வீட்டுல தெரியுமா?"

"தெரியாது. மொத புலம்புவா. எப்பவும் பொலம்பரதுதான் ... ஊர் உலகத்துல அவனவன் எப்படி எப்படி எல்லாம் சம்பாதிக்குறான், இங்க
சம்பாதிக்காட்டியும் கூட பராவாயில்ல இருக்கறத காப்பாத்தவாவது தெரியனும். ரெண்டும் இல்லன்னு அதே புலம்பல்தான்."

"ம் ..."

"சாமாளிச்சிடுவேன்."

"..."

"நீ எப்ப ஊருக்கு வர்ற?"

"அடுத்த மாசம் இல்ல அதுக்கு அடுத்த மாசம் வரலாம்ன்னு இருக்கேன். அப்ப வந்து பாக்குறேன்."

சொல்லி வைத்தது மாதிரி தான் எல்லாம் நடக்கிறது. அவனிடம் எதேட்சையாய் சொன்ன அதே அடுத்த மாதத்திற்கு அடுத்த மாதத்தில் நான் ஊருக்கு வந்திருக்கிறேன். வந்து மூன்று நாட்களாகியும் இந்த நிமிடத்திற்கு முன்பு வரை அவனை பார்க்கவில்லை. பார்க்கவில்லை என்பதை விட பார்க்க முடியவில்லை என்பது தான் சரி.

"நீ எப்படா வந்த?" - கடைசியாய் சென்னையில் கேட்ட குரல் மாதிரி கூட இல்லை, கொஞ்சம் உடைந்தது மாதிரி தான் பேசினான்.

"அம்மா ரெடியா இருக்காங்களா ... ஆட்டோ வந்திருக்கு பூத்து கூட்டமில்லாமதான் இருக்கு, இப்பவே ஓட்ட போட்டுட்டு வந்துறலாம். நான் டீச்சர் வீட்டுலேயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துரேன். ஒரு நிமிசம்."

"..."

"நிக்குறது வேற யாரும் இல்ல, நம்ம ஒன்றியச் செயலாளர் பையன் தான், எப்படி பாத்தாலும் நம்ம பங்காளி தான்."

"..."

"இல்லடா... இந்த ஒரு தடவை வேலை பார்த்துக் கொடுங்க... அடுத்த தடவை நிச்சயமா பார்த்துப் பண்ணிரலாம்னு அமைச்சரே சொல்லியிருக்காரு."

7 Comments:

  1. Anonymous said...
    நன்றாக உள்ளது.
    Anonymous said...
    when I read this story, I happen to remember my friend who is working for another party like this. Just it made me sad when I read the story.what to say is that the potential of young talents are being wasted or not directed in the right path or life is like this.

    Well, the story is almost the mirror of what's happening in real times.
    As some elderly person says, even if we think of doing good that will make good things to happen, I would think of writing stories like this is an act of thinking good for the social cause.
    Appreciated..
    Good story line.
    இன்பா (Inbaa) said...
    நன்றி மயிலக்காளை....

    நாம் நாள் தோறும் நம்மை கடந்து போகும் முகங்ளில் ஒன்று தான் இராமசாமி, இந்தக் கதை உங்கள் நண்பரை நினைவுபடுத்தியிருப்பதில் மகிழ்ச்சி. நம் முகம் பார்க்கும் கண்ணாடியில் மற்றவர் பிம்பம் விழுவதும் சந்தோசமே ...
    கதிர் said...
    சூப்பர் இன்பா!

    ரொம்ப இயல்பா இருந்தது. எங்க ஊர்ல ஒரு ஆள் இருக்கான் ஆனால் 1ம் நம்பர் கேடி அரசியல்ல.
    Anonymous said...
    இன்பா,
    மிக நன்றாக இருந்தது இந்த கதை.
    பல நினைவுகலை திரும்ப கொன்டு வந்து என் கன்முன்னெ நிருத்தியது.
    இம்ம் காலம் மாறினாலும் இந்த அரசியல் காட்சி மாறது.

    நன்றி
    மாயா
    இன்பா (Inbaa) said...
    நன்றி மாயா,
    நன்றி வள்ளுவன்,
    //
    I am expecting more posts from you.
    //

    நிச்சயமாக.
    Anonymous said...
    பாவமுங்க அவரு.. தலைவரு, தலைவரு ன்னு இன்னும்க் எத்தனை நாளுதான் போவாரு..?

    படிச்சுப் பார்த்தேன். நல்லா இருந்திச்சு உங்க கதை. ஒரு வரியில சொல்லணும்னா ... இங்கே பாருங்க.

Post a Comment